திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று நடந்த கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், நான்கு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். திருத்தணி முருகன் கோவிலில் நேற்று, வைகாசி மாத கிருத்திகை விழாவை முன்னிட்டு, அதிகாலை 5:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தங்க கீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை 10:00 மணிக்கு, மலைக்கோவிலில் உள்ள காவடி மண்டபத்தில், உற்சவர் முருக பெருமானுக்கு பால், பன்னீர், வீபூதி மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற அபிஷேக பொருட்களால், சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் செய்து, தீபாராதனை நடந்தது. இரவு 7:30 மணிக்கு, வெள்ளி மயில் வாகனத்தில் உற்சவர் முருகப்பெருமான், சிறப்பு அலங்காரத்தில் மாடவீதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கிருத்திகை விழாவில், தமிழகம் மற்றும் ஆந்திராவில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், மலைக்கோவிலுக்கு வந்திருந்து, பொதுவழியில் நான்கு மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.