ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் முக்கிய போட்டி ஒன்றில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் மும்பை அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது. தோல்வி அடைந்த சென்னை அணி, இன்று நடைபெறவுள்ள போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மீண்டும் மோதும்
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் சிம்மன்ஸ் மற்றும் பட்டேல் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. சிம்மன்ஸ் 65 ரன்களும், பொல்லார்ட் 41 ரன்களும், பட்டேல் 35 ரன்களும் எடுத்தனர்.
188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரிலேயே நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்மித் ரன் ஏதும் எடுக்காமல் மலிங்கா பந்தில் அவுட் ஆனார். இந்நிலையில் தொடர்ந்து சீரான இடைவெளியில் சென்னை அணியின் விக்கெட் வீழ்ந்து கொண்டே வந்தது. இறுதியில் 19 ஓவர்களில் 162 ரன்களுக்கு சென்னை அணி ஆட்டமிழந்தது. இதனால் மும்பை அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
பொல்லார்டு ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.