ஜெயம் ரவி, ஹன்சிகா நடிப்பில் லக்ஷ்மண் இயக்கியுள்ள ‘ரோமியோ ஜூலியட்’ படத்தைப் பார்த்துவிட்டு டி.ராஜேந்தர் சமாதானம் ஆகிவிட்டதாகவும், இதனால் சர்ச்சைக்குள்ளான ‘டண்டணக்கா’ பாடல் விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் கோலிவுட்டில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது.
‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் டி.இமான் இசையில் அனிருத் பாடிய ‘டண்டனக்கா’ பாடல் தன்னை இழிவு படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக கூறிய பிரபல இயக்குனர் டி.ராஜேந்தர், படக்குழுவினர்களிடம் ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில், டி.ராஜேந்தரை நேரில் சந்தித்து சமாதானப்படுத்த படக்குழுவினர் முடிவு செய்தனர்.
இந்நிலையில் இப்பிரச்சினை சுமூகமாக தீர்க்கும் முனைப்போடு, டி.ராஜேந்தருக்கு சமீபத்தில் ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை திரையிட்டு காட்டியதாகவும், முழுப்படத்தையும் பார்த்த டி.ராஜேந்தர் மிகவும் மகிழ்ச்சி அடைந்து படக்குழுவினர்களுக்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும் டி.ராஜெந்தர் தாக்கல் செய்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் அன்று, அவ்வழக்கை அவர் வாபஸ் பெற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து தடங்கல்களையும் தாண்டி ஜூன் 12ம் தேதி ‘ரோமியோ ஜூலியட்’ திரைக்கு வரவிருப்பதை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.