சமீபத்தில் டெல்லி முதல்வர் பதவியை ஏற்ற அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் டெல்லி கவர்னருக்கும் இடையே மோதல் முற்றி வருவதாகவும், இந்த மோதலை சமாதானபடுத்த வேண்டிய மத்திய அரசு ஒதுங்கி நிற்பதாகவும் டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி யூனியன் பிரதேசத்தில் யாருக்கு அதிகாரம் அதிகம் என்பது குறித்து டெல்லி கவர்னர் நஜீப் ஜங் அவர்களுக்கும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே கடந்த சில நாட்களாக பனிப்போர் நடந்து வருகிறது.
தற்காலிக தலைமை செயலாளராக சகுந்தலா கேம்லின் என்ற பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியை கவர்னர் நியமனம் செய்ததற்கு முதல்வர் கெஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் கெஜ்ரிவாலின் எதிர்ப்பையும் மீறி, சகுந்தலா கேம்லின், பொறுப்பு ஏற்றுக் கொண்டதால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கெஜ்ரிவால் கேம்லினின் நியமனம் குறித்த கடிதத்தை வெளியிட்ட முதன்மை செயலாளர் அனின்டோ மஜும்தாரை இடமாற்றம் செய்ததோடு அவரது அறையும் பூட்டப்பட்டது.
இந்நிலையில் அனின்டோ பதிலாக அரவிந்த் கெஜ்ரிவால் குமார் என்பவரை முதன்மை செயலாளராக நியமனம் செய்தார். ஆனால் இந்த நியமனத்தை கவர்னர் செல்லாது என அறிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே இருவரின் மோதல் போக்கு குறித்து பிரதமரிடம் உள்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.அப்போது டெல்லி அரசியல் போக்கில் மத்திய அரசு நேரடியாக தலையிடுவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது சட்ட ரீதியாக இயலாது என்பதால் அது குறித்து தெளிவான முடிவுக்கு மத்திய அரசு வரவில்லை என்று கூறப்படுகிறது.