டெல்லியில் முதல்வர்-ஆளுனர் மோதல் குழந்தைகள் சண்டையைவிட மோசமாகிவிட்டது. ராமதாஸ்

cm and governorடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் அம்மாநில கவர்னருக்கும் கடந்த சில நாட்களாக மோதல் நடைபெற்று வரும் நிலையில் ஒரு மாநிலத்திற்கு ஆளுனர் பதவி தேவையா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

“தில்லி மாநில நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்புகளில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் யாருக்கு  உள்ளது? என்பது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், துணைநிலை ஆளுனர் நஜீப் ஜங் ஆகியோருக்கிடையே நடந்து வரும் மோதல் உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. இருவருக்கும் இடையேயான மோதலால் உண்மையாக பாதிக்கப்பட்டிருப்போர் தில்லி யூனியன் பிரதேச மக்கள்தான்.

தில்லி யூனியன் பிரதேசத்தின் தலைமைச் செயலாளரான கே.கே. ஷர்மா 10 நாட்களுக்கு விடுப்பில்  சென்றதால் தற்காலிக தலைமைச் செயலாளராக யாரை நியமிப்பது என்ற வினா எழுந்தது. இதுகுறித்து தில்லி யூனியன் பிரதேச அரசு முடிவெடுப்பதற்கு முன்பாகவே, இப்பிரச்சினையில் தலையிட்ட தில்லி துணைநிலை ஆளுனர் ஜங், குறிப்பிட்ட காலத்திற்குள் தில்லி அரசு முடிவெடுக்கவில்லை என்று கூறி, தில்லி மின்துறை செயலர் சகுந்தலா காம்லினை தற்காலிக தலைமைச் செயலராக நியமித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தில்லி துணை நிலை ஆளுனருக்கு ஆதரவாக செயல்பட்ட சில அதிகாரிகளை முதல்வர் இடமாற்றம் செய்வதும், அதை ஆளுனர் ரத்து செய்வதும் தொடர்கதையாகி விட்டதால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக தில்லியில் அரசு நிர்வாகம் முற்றிலுமாக முடங்கி கிடக்கிறது.

இவ்வளவுப் பிரச்சினைக்கும் காரணம் தில்லி முதலமைச்சருக்கும், துணைநிலை ஆளுனருக்கும்  இடையே நடக்கும் அதிகாரப் போட்டி தான். தில்லியில் தற்காலிக தலைமைச் செயலரை தன்னிச்சையாக நியமிக்க ஆளுனருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. தலைமைச்செயலாளர் பதவி காலியாகிவிட்ட நிலையில், புதிய தலைமைச் செயலாளராக யாரை நியமிப்பது என்பது தொடர்பாக தில்லி அமைச்சரவை அளிக்கும் பரிந்துரையை செயல்படுத்துவது தான் துணைநிலை ஆளுனரின் கடமையாகும். அவ்வாறு இருக்கும்போது தில்லி ஆளுனர் தன்னிச்சையாக முடிவெடுத்து தற்காலிக தலைமைச் செயலாளரை நியமித்தது மிகப்பெரிய தவறு ஆகும். இருப்பினும் இவ்விஷயத்தில் முதலமைச்சர் கெஜ்ரிவால் சற்று அரசியல் முதிர்ச்சியுடன் செயல்பட்டிருந்தால்  தேவையில்லாத மோதல்களைத் தவிர்த்திருக்க முடியும். ஆனால், இருவருமே பக்குவமின்றி நடந்ததால் இது குழந்தைகள் சண்டையைவிட மோசமாகிவிட்டது.

தில்லியில் நடக்கும் அதிகாரப் போட்டிக்கு மத்திய அரசும் பொறுப்பேற்க வேண்டும். 1991ஆம் ஆண்டு தில்லி  யூனியன் பிரதேசத்திற்கு சிறப்பு அதிகாரம் அளிப்பதற்காக இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 69 ஆவது திருத்தத்தின் மூலம் 239 கிகி என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டது. தில்லி நிர்வாகத்தைப் பொறுத்தவரை இந்தப் பிரிவு, 1992 ஆம் ஆண்டின் தில்லி தலைநகரப்பகுதி  அரசு சட்டம், அதன் அடிப்படையில் 1993 ஆம் ஆண்டில் வகுக்கப்பட்ட தில்லி தலைநகரப்பகுதி  அரசு அலுவல்கள் பரிவர்த்தனை விதிகள் ஆகியவை தான் வழி காட்டும் சக்திகள் ஆகும். இவற்றில் எந்த இடத்திலும் தில்லி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுனர் தன்னிச்சையாக செயல்படலாம்  என்று கூறப்படவில்லை. அனைத்து விஷயங்களிலும் மாநில அமைச்சரவையின் பரிந்துரைப்படி தான் ஆளுனர் செயல்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. விதிகள் தெளிவாக இல்லாத விஷயங்களில் மத்திய அரசின் ஆலோசனையை கேட்டு ஆளுனர் செயல்பட முடியும். ஆனால், இந்த சிக்கலில் மத்திய அரசின் ஆலோசனையை ஆளுனர் கேட்டாரா? என்பது தெரியவில்லை. ஒருவேளை ஆளுனர் ஆலோசனை கேட்காவிட்டால் கூட, இப்பிரச்சினை பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால், இம்மோதலை மத்திய அரசு ரசிக்கிறது என்று தான் கருத வேண்டியிருக்கிறது.

இவை அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு ஒரு பாமரனின் பார்வையில் பார்த்தாலும் தில்லி ஆளுனரின் செயல்பாடுகளை நியாயப்படுத்த முடியாது. அரசியலமைப்பின்படி இந்தியா மக்களாட்சித் தத்துவத்தை கடைபிடிக்கும் நாடு ஆகும். அதன்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் தான் அதிகாரங்கள் இருக்க வேண்டும். அதை விடுத்து மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுனர்களிடம்  அதிகாரத்தை ஒப்படைப்பது மிகவும் ஆபத்தானது ஆகும். தமிழகத்திற்கு அருகிலுள்ள புதுச்சேரியில்  முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நியமிக்கப்பட்ட துணை நிலை ஆளுனர் வீரேந்திர கட்டாரியா, சிலரின் கைப்பாவையாக செயல்பட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பணிகளை முடக்கினார். மற்ற மாநிலங்களில், மத்தியில் ஆள்வோருக்கு வேண்டிய அரசாக இருந்தால் ஆளுனர்கள் அமைதி காப்பதையும், வேண்டாத அரசாக இருந்தால் தொல்லை கொடுப்பதையும் பார்க்க முடிகிறது.

ஆங்கிலேயர் ஆட்சியில் மாநில அரசை கண்காணிப்பதற்காகவே ஆளுனர்கள் நியமிக்கப்பட்டனர். அடிமை ஆட்சி முடிந்து மக்களாட்சி வந்த பிறகும் அதே நடைமுறை தொடர வேண்டுமா? என்று மத்திய அரசு சிந்திக்க வேண்டும். ஒருவேளை மாநில அரசு தவறு செய்யாமல் கண்காணிப்பதற்காகத் தான் ஆளுனர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்றொரு வாதம் முன்வைக்கப்பட்டால் அதுவும் எடுபடாது. ஆளுனர்கள் உண்மையான கண்காணிப்பாளர்களாக செயல்பட்டால் எந்த மாநிலத்திலும் ஊழலோ, முறைகேடுகளோ நடந்திருக்க முடியாது. கோபாலகிருஷ்ண காந்தி போன்ற நேர்மையான ஆளுனர்கள்  சிலரும் இருந்துள்ளனர். ஆனால், பெரும்பாலான ஆளுனர்களே ஊழல் உள்ளிட்ட அனைத்து விதமான முறைகேடுகளிலும் ஈடுபட்ட வரலாறு உள்ளது. ஆளுனர்கள் வேந்தர்களாக இருக்கும் பல்கலைக் கழகங்களில் தான் பணியாளர் நியமனம் தொடங்கி துணை வேந்தர் நியமனம் வரை பெருமளவில் ஊழல் நடைபெறுகிறது; மாநில அரசின் ஊழல்கள் குறித்து ஆளுனரிடம் புகார் பட்டியல் கொடுத்தால், அவற்றை கோப்பில் சேர்ப்பதைத் தவிர, அதன்மீது வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை  எனும் போது இப்படி ஒரு பதவி தேவையா? என்ற வினா எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. எனவே, ஆளுனர் பதவி தேவையா? என்பது குறித்து பொது விவாதம் நடத்தி முடிவெடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாக கருதுகிறேன். இதை உணர்ந்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply