சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான ஜெயலலிதா நாளை மறுநாள் முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில் தமிழக எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்த வழக்கை மேல்முறையீடு செய்ய வேண்டும் என வற்புறுத்தி வருகின்றன. ஆனால் இந்த வழக்கை மேல்முறையீடு செய்ய வேண்டாம் என முன்னாள் மத்திய அமைச்சர் சி.எம்.இப்ராகிம், முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சி.எம்.இப்ராகிம் தனது கடிதத்தில், “” சொத்து குவிப்பு வழக்கு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்து உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்குக்கும் கர்நாடகத்துக்கும் சம்பந்தம் இல்லை. இதில் கர்நாடக அரசு மனுதாரர் கிடையாது. இந்தச் சூழ்நிலையில் உயர் நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டாம்.
மேலும் தமிழ்நாட்டில் ஜெயலலிதா மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராக உள்ளார். அவர் ஏழை மக்களுக்காக பாடுபட்டு வருவதை நான் கண்கூடாகப் பார்த்துள்ளேன். மேலும் கர்நாடக மற்றும் தமிழ்நாடு மக்களின் நல்லிணக்கத்தைக் கருத்தில் கொண்டு அப்பீல் செய்யக்கூடாது.
இவ்வாறு அவர் தனது கடித்ததில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜசேகரன் என்பவரும் இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய வேண்டாம் என்று முதலமைச்சர் சித்தராமையாவுக்கு ஏற்கனவே கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.