ஜெயலலிதா பதவியேற்பதை எதிர்த்து மனுதாக்கல் செய்த வழக்கறிஞருக்கு ரூ.25,000 அபராதம்.

jayalalithaசொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான ஜெயலலிதா நாளை தமிழக முதல்வராக மீண்டும் பதவியேற்க உள்ளார். இன்று காலை ஏழு மணிக்கு கூடும் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஜெயலலிதா கட்சியின் சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட இருக்கின்றார். அதன்பின்னர் இன்று ஆளுனரை ஜெயலலிதா சந்தித்து ஆட்சியமைக்க அனுமதி கோருவார். பின்னர் நாளை காலை 11 மணிக்கு சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில் தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்க தடை விதிக்க கோரி வழக்கறிஞர் ரவிராஜ் குருராஜ் குல்கர்னி என்பவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேணுகோபால கவுடா, வீரப்பா ஆகியோர் கொண்ட அமர்வு ம்ன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், விளம்பர நோக்கில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதாக கூறி வழக்கறிஞர் ரவிராஜ் மனுவை தள்ளுபடி செய்ததோடு, அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

மேலும் தேமுதிக வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா பதவியேற்பதை தடை செய்ய கோரி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply