மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹரே கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் நிறுவனம் ஒன்று சமீபத்தில் ஒரு பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த நிறுவனத்தில் வேலை ஒன்றுக்காக விண்ணப்பம் அனுப்பியிருந்த ஜெசான் அலி கான் என்பவருக்கு பதில் அனுப்பியுள்ள இந்த நிறுவனம், ” ‘மன்னிக்கவும் முஸ்லிம்களை நாங்கள் பணியமர்த்துவதில்லை’ என்று சர்ச்சைக்குரிய ஒரு பதிலை அனுப்பியுள்ளது. “என்னை பணியமர்த்த வேண்டாம் என அவர்கள் நினைத்திருந்தால், அதற்கு அவர்கள் வேறு ஏதாவது காரணத்தை சொல்லியிருக்கலாம், ஆனால் முஸ்லீம் என்பதால் பணியில் அமர்த்தவில்லை என்று கூறியிருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்று ஜெசான் அலி கான் கூறியுள்ளார்.
ஜெசான் தனது மன வருத்தத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்தார். இவருடைய பதிவை பார்த்த ஆயிரக்கணக்கானோர் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தை சரமாரியாக வசை பாடினர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஹரே கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுத் துறை தலைவர் மகேந்திரா எஸ்.தேஷ்முக், வருத்தம் தெரிவித்து ஜெசானுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
அந்த கடிதத்தில், “பாலினம், மதம், ஜாதி அடிப்படையில் மனிதர்களிடம் எங்கள் நிறுவனம் பாகுபாடு பார்ப்பதில்லை என்பதை தெளிவுபடுத்து விரும்புகிறேன். உங்களுக்கு ஏதாவது மன வருத்தம் ஏற்பட்டிருந்தால் அதற்காக ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், குறிப்பிட்ட அந்த மின்னஞ்சலை எங்கள் நிறுவனத்தில் பயிற்சியாளாராக இருக்கும் தீபிகா டிகேவால் தவறுதலாக அனுப்பப்பட்டது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்குமாறு மகாராஷ்டிரா சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஏக்நாத் காத்சே உத்தரவிட்டுள்ளார்.