யூனியன் பிரதேசங்களில் ஆளுனருக்கே அதிக அதிகாரம். மத்திய அரசு அதிரடி அறிக்கை.

delhi smடெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தற்காலிக தலைமை செயலாளர் நியமன விஷயத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ர்வால் அவர்களுக்கும், டெல்லி துணை நிலை ஆளுனர் நஜீப் ஜங் அவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின்னர் அது மோதலாக வெடித்தது. இதுகுறித்து இருவரும் மாறி மாறி குடியரசு தலைவரிடம் புகார் அளித்த நிலையில் இன்று மத்திய அரசு ஆளுனரின் அதிகாரம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் டெல்லி உள்பட நாட்டின் அனைத்து யூனியன் பிரதேசங்களிலும் ஆளுநருக்கே அதிக அதிகாரம் என்றும், யூனியன் பிரதேசங்களில் உள்ள  ஆளுநர் விருப்பப்பட்டால் மட்டுமே முதல்வரின் கருத்தை அறியலாம் என்றும் முதல்வரின் கருத்தை துணை நிலை ஆளுநர் அறிய வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி காவல்துறை அதிகாரிகள் நியமனம் துணை நிலை ஆளுநரின் அதிகாரத்திற்கு மட்டுமே உட்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. டெல்லியில் நடைபெற்று வரும் ஆம் ஆத்மி அரசை பாரதிய ஜனதா நேரடியாக எதிர்க்க முடியாததால், ஆளுனர் மூலம் பிரச்சனை செய்து வருவதாக அவர் மத்திய அரசு மீது புகார் கூறியுள்ளார். இந்த விஷயத்தில் குடியரசு தலைவர் தலையிட்டு ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply