ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் மும்பை அணியுடன் மோதுவது யார் என்பதை தீர்மானிக்கும் முக்கிய போட்டி ஒன்றில் சென்னை அணி பெங்களூர் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதனால் மீண்டும் மும்பை அணியுடன் சென்னை அணி இறுதிப்போட்டியில் மோதுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று ராஞ்சியில் நடைபெற்ற சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டி ஒன்றில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. கெய்ல் 41 ரன்களும், தினேஷ் கார்த்திக் 28 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, தொடக்க ஆட்டக்காரர் மைகெ ஹுசய்யின் அதிரடி ஆட்டத்தினால் 19.5 ஓவர்களில் 140 ரன்கள் எடுத்து ஒரு பந்து மீதமிருக்கையில் த்ரில் வெற்றியை பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. மைக் ஹுசய் 56 ரன்களும், தோனி 26 ரன்களும், டீபிளஸ்ஸிஸ் 21 ரன்களும் எடுத்தனர்.
மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்திய நெக்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி மற்றும் மும்பை அணி இறுதிப்போட்டியில் மோதவுள்ளது. ஐ.பி.எல் சாம்பியன் யார்? என்பது வரும் ஞாயிறு அன்று தெரியவரும்.