மாட்டிறைச்சி உண்ண விரும்புபவர்கள் பாகிஸ்தானுக்கு சென்றுவிடுங்கள். மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு.

naguiமத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பொறுப்பை ஏற்றதில் இருந்து அந்த கட்சியின் மத்திய அமைச்சர்கள் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்தை கூறிவிட்டு பின்னர் வாங்கிக்கட்டி கொள்ளும் நிகழ்ச்சி அடிக்கடி கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது. இந்நிலையில் மீண்டும் ஒரு அமைச்சர் மாட்டுக்கறி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் ஓராண்டு சாதனை குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாதம் ஒன்றில் பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறைக்கான அமைச்சர் முக்தர் அபாஸ் நக்வி பேசியபோது, “மாட்டிறைச்சி உண்ணவில்லை என்றால் உயிர்வாழ முடியாது என நினைப்பவர்கள் அனைவரும் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்’ என்று கூறியுள்ளார்.

இந்த தொலைக்காட்சி விவாதத்தில் மகாராஷ்டிரத்தில் மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடை, அதனால் அந்த மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் இறைச்சித் தொழில் பாதிப்பு குறித்து விவாதிக்கப்பட்ட போது, ‘மாட்டிறைச்சியை உண்போர் அதிகம் வாழும் கோவா, ஜம்மு, கேரளா ஆகிய பகுதிகளில் இதே தடையை கொண்டுவர பாஜக முனைப்புடன் செயல்படுவதாக அகில இந்திய முஸ்லிம் அமைப்பு தலைவர் உவைஸி குற்றம்சாட்டினார். அதற்கு  பதில் அளித்த அமைச்சர் நக்வி, “இந்த தடை லாபம் நஷ்டம் சார்ந்தது அல்ல. இது முற்றிலும் இந்துக்களின் நம்பிக்கை சார்ந்தது. மாட்டிறைச்சி உண்ணவில்லை என்றால் உயிர்வாழ முடியாது என நினைப்பவர்கள் அனைவரும் பாகிஸ்தான் அல்லது அரபு நாடுகளுக்கு செல்லலாம். உலகில் மாட்டிறைச்சி கிடைக்கும் எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் செல்லலாம்” என்று கூறினார்.

மத்திய அமைச்சர் நக்வியின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து டுவிட்டரில்  #Go to Pakistan என்ற ஹேஷ்டேகில் நக்விக்கு எதிரான கருத்துக்கள் குவிந்து வருகின்றன. எதிர்க்கட்சிகளும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றன.

Leave a Reply