இந்தியா மற்றும் வங்கதேச நாடுகள் இடையே நட்புறவை மேலும் வலுப்படுத்த இரு நாட்டு தலைவர்களும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் தற்போது இன்னும் ஒரு முயற்சியாக இந்தியா -வங்க தேச நாடுகள் இடையே பேருந்து போக்குவரத்து நேற்று தொடங்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையே நட்பு ரீதியிலான பயணமாக, வங்க தேசத் தலைநகர் டாக்காவிலிருந்து புறப்பட்ட அந்நாட்டு அரசுப் பேருந்து ஒன்று நேற்று மேகாலய மாநிலத்துக்கு வந்து சேர்ந்தது. இந்த பேருந்தை இந்திய அரசு அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்
இரு நாட்டு மக்களுக்கிடையே நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தவும், நட்பை மேலும் வளர்ப்பதற்கும் இந்த பேருந்து சேவை பெரும் உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இதுகுறித்து வங்க தேச சாலைப் போக்குவரத்து அமைச்சக இணைச் செயலர் அஷருல் இஸ்லாம் கான் கூறுகையில், “விரைவில் இந்தப் பேருந்து தினசரி இயக்கப்படக்கூடும்’ என்றார். இந்தப் பேருந்து நாளை ஷில்லாங் வழியாக டாக்கா செல்ல உள்ளது. மேகாலய போக்குவரத்து கழக மேலாளர் அந்தோணி இந்த பேருந்தை வழியனுப்பி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே கடந்த 1999ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பேருந்து சேவை தொடங்கப்பட்டது. ஆனால் 2001ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தாக்குதலை அடுத்து இந்த பேருந்து நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.