ஐந்தாவது முறையாக மீண்டும் தமிழக முதல்வராக நேற்று முன் தினம் பொறுப்பேற்றுக்கொண்ட ஜெயலலிதா நேற்று தலைமைச்செயலகத்திற்கு வருகை தந்து அம்மா உணவகங்கள் உள்பட பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்நிலையில் நேற்று ஈரோட்டில் பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், ஜெயலலிதாவின் வழக்கை மேல்முறையீடு செய்ய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அவர் கூறிய சிலமணி நேரங்களில் கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் சட்டப்பிரிவுத் தலைவர் தனஞ்ஜெயா, ஜெயலலிதா வழக்கை மேல்முறையீடு செய்ய தேவையில்லை என்று கூறியுள்ளார். ஒரே கட்சியை சேர்ந்த இருவர் வெவ்வேறு கருத்துக்களை கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தனஞ்ஜெயா கர்நாடக அரசிற்கு எழுதியுள்ள கடிதத்தில், ”ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை சுப்பிரமணியன் சுவாமி தான் தாக்கல் செய்தார். முதலில் தமிழக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படியே கர்நாடகாவிற்கு அந்த வழக்கு மாற்றப்பட்டது.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசின் செயல்பாடு நிர்வாக ரீதியிலானது மட்டுமேயன்றி, நீதித்துறை சார்ந்தது அல்ல. இந்த வழக்குத் தொடர்பாக, சிறப்பு நீதிமன்றம், அல்லது உயர் நீதிமன்ற விசாரணையிலோ, அல்லது வாதங்களிலோ, ஒரு தரப்பாக கர்நாடக அரசு செயல்படவில்லை.
மேலும், இந்த வழக்கு தமிழகத்திலிருந்து மாற்றப்பட்டபோது, உச்ச நீதிமன்றத்தில், கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவில், இந்த வழக்கு விசாரணை கர்நாடகாவில் நடைபெறுவதை விரும்பவில்லை என்று குறிப்பிட்டிருந்தது. அதனால், சொத்துக்குவிப்பு வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்வது, நல்லதொரு அணுகுமுறையாக இருக்காது” என்று கூறி உள்ளார்