தமிழகத்தின் தலையெழுத்தை பாட்டாளி மக்கள் கட்சி இன்னும் பத்து மாதங்களில் மாற்றும் என்றும் தாலிக்கு தங்கம் கொடுப்பதற்கு பதில் புதிய பல வேலை வாய்ப்பை உருவாக்குவோம் என்றும் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை திருவான்மியூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற பிரமாண்டமான பாமக பொதுக்கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது:
தமிழகத்தை 50 ஆண்டுகளாக ஆட்சி செய்த திராவிடக் கட்சிகள் தங்கள் நலன் சார்ந்தே யோசித்தன. ஆட்சியால் அவர்கள் மட்டுமே பயன் பெற்றனர். தமிழக மக்களின் வாழ்க்கை வளர்ச்சி அடையவில்லை. தமிழகத்தின் தலையெழுத்தை பாமக இன்னும் 10 மாதங்களில் மாற்றும். நேர்மையான, ஊழலற்ற, நாணயமான ஆட்சியை எங்களால்தான் தர முடியும்.
மற்ற கட்சிகள் தேர்தலை பற்றித்தான் யோசிக்கும். நாங்கள் அடுத்த தலைமுறையை வழிநடத்துவது பற்றி சிந்திக்கிறோம். தமிழகத்தில் நாங்கள் பல புதிய திட்டங்களை கொண்டு வருவோம். தாலிக்கு தங்கம் தர மாட்டோம். வேலைவாய்ப்பை உருவாக்குவோம்.
மு.க.ஸ்டாலினுக்கு 2 கடிதங்கள் எழுதினேன். பொது விவாதத்துக்கு அழைத்தேன். ஆனால், அவர் பதில் சொல்லாதது ஏன் என்று தெரியவில்லை.
இவ்வாறு அன்புமணி பேசினார்.