கேட்பது இசையா, இரைச்சலா என நாம் உணர்ந்து கொள்வதற்காகப் படைக்கப்பட்ட காதுக்குள்ளேயே இரைச்சல் ஏற்படுவது பலருக்கும் பெருந்தொல்லையாக இருக்கும்.
இந்தியாவில் பத்தில் ஒருவருக்கு இந்தப் பிரச்சினை உள்ளது. உலக அளவில் முதியோருக்கு ஏற்படும் முக்கிய உடல்நலப் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று.
எது காது இரைச்சல்?
காது இரைச்சல் (Tinnitus) என்பது ஒரு தனிப்பட்ட நோயல்ல; உடலில் இருக்கும் ஒரு நோயின் வெளிப்பாடு; அறிகுறி. காது இரைச்சலுக்கான காரணம் காதிலும் இருக்கலாம்; உடலின் வேறு பகுதியிலும் இருக்கலாம்.
சில மனநோயாளிகள்கூடக் காதில் இரைச்சலும் குரலும் கேட்பதாகக் கூறுவார்கள். காது, காதிலுள்ள எலும்புகள், காதிலிருந்து மூளைக்குச் செல்லும் காது நரம்பு, மூளை ஆகியவற்றில் எது பாதிக்கப்பட்டாலும் காதில் இரைச்சல் ஏற்படும்.
காதுக்குள் வண்டு ரீங்காரம் செய்வது போன்றோ, `இஸ்ஸ்ஸ்…’ என்ற இரைச்சலோ, குக்கர் விசில் அடிப்பது போன்றோ, புயல் மாதிரிப் பேரிரைச்சலோ கேட்பதாக இருந்தால் அந்த நபருக்கு ‘காது இரைச்சல்’ இருப்பதாக அர்த்தம். இந்த இரைச்சலின் தன்மை ஆளுக்கு ஆள் வேறுபடும். ஒருவருக்கு இரைச்சல் தொடர்ச்சியாகக் கேட்கும்; இன்னொருவருக்கு விட்டு விட்டுக் கேட்கும். ஒரு சிலருக்கு இரைச்சல் தாங்கமுடியாத அளவுக்குக் கடுமையாக இருக்கும்.
பாதிப்புகள் என்ன?
சுற்றுப்புறம் அமைதியாக இருந்தால், காதுக்குள் இரைச்சல் அதிகமாகக் கேட்கும். குறிப்பாக, இரவில் இது அதிகம் தொல்லை தரும். உறக்கம் வராது. மனக் குழப்பத்துக்கு அடிபோடும். நினைவாற்றல் குறையும். மன அழுத்தம் அதிகரிக்கும். பகல் நேரப் பணியில் கவனம் செலுத்துவது சிரமம் தரும். உடல் சோர்வாக இருக்கும்.
காரணம் என்ன?
காது இரைச்சலுக்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றைத் தற்காலிகக் காரணங்கள், நிரந்த காரணங்கள் என்று பிரித்து வைத்துள்ளது மருத்துவம். காதுமடலைச் சேர்த்துச் சிறு துவாரமாகக் காதுக்குள் செல்கிற வெளிக்காதுக்குழலில், இயற்கையாகச் சுரக்கிற மெழுகு உருண்டு திரண்டு கட்டியாகிக் காதை அடைத்துக்கொண்டால், அயல் பொருட்கள் ஏதாவது அடைத்துக்கொண்டால், காளான் தொற்று ஏற்பட்டால் காதுக்குள் இரைச்சல் கேட்கும். இவையெல்லாமே தற்காலிகமாகக் காது இரைச்சலை உண்டாக்குபவை.
காதில் உள்ள அழுக்கை / அயல் பொருளை அகற்றிவிட்டால் அல்லது காளான் தொற்றுக்குச் சிகிச்சை பெற்றுவிட்டால் காது இரைச்சலில் இருந்து விடைபெறலாம். ஜலதோஷம் பிடிப்பதால்கூடச் சில நேரங்களில் தற்காலிகமாகக் காது இரைச்சல் உண்டாகும்.
அதேநேரத்தில் சில காரணங்களால் காது இரைச்சல் நிரந்தரமாகிவிடும். முதுமை இதற்கு முக்கியக் காரணம். வயதாக வயதாக நடுக்காது எலும்புகள், காக்ளியா எனும் நத்தை எலும்பு மற்றும் காது நரம்பிழைகள் சிதைவடைவதால் காதுக்குள் இரைச்சல் தொடங்குவது வழக்கம். காதுக்குப் போகும் ரத்தம் முதுமையில் குறைவதாலும் காதில் இரைச்சல் ஏற்படுவதுண்டு.
வெளிக்காதையும் நடுக்காதையும் பிரிக்கிற செவிப்பறையில் துளை விழுந்துவிட்டால், காது இரைச்சல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதுபோன்று நடுக்காதுக்குள் நீர் கோத்துக்கொண்டால், சீழ் பிடித்துவிட்டால் காது இரைச்சல் ஏற்படும். நடுக்காதில்தான் நம் உடலிலேயே மிகச் சிறிய எலும்புகளான சுத்தி, பட்டடை, அங்கவடி எலும்புகள் உள்ளன.
இவற்றில் ‘எலும்பு முடக்கம்’ (Otosclerosis) எனும் நோய் தாக்கும்போது, எலும்புகள் இறுகி, ஒலி அதிர்வுகள் காது நரம்புக்குச் செல்வது தடைபடும். அப்போது காது மந்தமாவதோடு, இரைச்சலும் கேட்கும். அடுத்து, தொண்டையையும் காதையும் இணைக்கிற ‘காது – மூக்கு -தொண்டைக்குழாய்’ (Eustachian tube) அழற்சி அடைந்து, வீங்கிக் கொண்டாலும் காது இரைச்சலுக்கு வழி அமைக்கும். காதில் அடிபட்டாலும் இந்தப் பிரச்சினை ஏற்படலாம்.
ஒலி மாசு தரும் ஆபத்து
இன்றைய சூழ்நிலையில் ஒலி மாசு இல்லாத இடமே இல்லை எனலாம். பெருநகரங்களின் முக்கிய இடங்கள் எல்லாமும் சாதாரணமாக 90 டெசிபல் சத்தத்தைக் கொண்டுள்ளன. இந்தச் சத்தத்தைத் தொடர்ந்து எட்டு மணி நேரத்துக்குக் கேட்கிறோம் என்றால் அது காதைக் கட்டாயம் பாதிக்கும். எப்படி?
உட்காதில் உள்ள ‘காக்ளியா’எனும் நத்தை எலும்பில் ஒலி அதிர்வுகளை மூளைக்குக் கொண்டு செல்கிற நரம்பிழைகள் ஏராளமாக உள்ளன. காதுக்குள் நுழைகிற பலத்த ஒலி அலைகள், இந்த நரம்பிழைகளைச் சிதைத்துவிடுகின்றன. அப்போது இவை அசாதாரண ஒலியை உண்டாக்குகின்றன. இவற்றின் விளைவு, காது இரைச்சல்.
முக்கியமாகப் பலத்த சத்தத்துடன் இயங்குகிற இயந்திரங்களுக்கு நடுவில் வேலை பார்ப்பவர்கள், ‘ராக்’போன்ற அதிகமான சத்தத்தை வெளிப்படுத்தும் இசைக் கருவிகளை வாசிப்பவர்கள், விமான நிலையத்துக்கு அருகில் குடியிருப்பவர்கள், ‘வாக்மேனை’அதிக நேரம் பயன்படுத்துபவர்கள், அடிக்கடி வெடிச் சத்தம் கேட்பவர்கள் ஆகியோருக்கு இம்மாதிரியான நரம்புப் பிரச்சினை வந்து காதுக்குள் இரைச்சல் ஏற்படுவது உண்டு.
குழந்தைகளுக்கும் காது இரைச்சல்
சிலருக்குப் பிறவியிலேயே நரம்புக் கோளாறு ஏற்பட்டிருந்தால், சிறு வயதிலிருந்தே காதுக்குள் இரைச்சல் கேட்கும். மிக நெருங்கிய உறவில் திருமணம் செய்துகொண்டவர்களுக்குப் பிறக்கிற குழந்தைகளுக்கு இந்த மாதிரி நரம்புக் கோளாறு ஏற்பட்டுக் காது இரைச்சலுக்கு வழிவிடும். சிலருக்குப் பரம்பரை காரணமாகவும் காது இரைச்சல் நிரந்தரமாகிவிடும்.
இது தவிர உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், நீரிழிவு, ரத்தச் சோகை, ஒற்றைத் தலைவலி, குறை தைராய்டு, மினியர் நோய், மூளையில் ஏற்படுகிற ரத்தக் குழாய் பாதிப்புகள், புற்றுநோய் கட்டிகள், தாடை எலும்பு பாதிப்பு போன்றவையும் காது இரைச்சலுக்கு மேடை அமைக்கும். புகைபிடிப்பது, மது அருந்துவது, ‘காஃபீன்’ மற்றும் குளிர்பானங்களை அதிகமாகப் பருகுவது போன்றவை காது இரைச்சலை அதிகப்படுத்தும்.
மாத்திரைகள் கவனம்!
பல்வேறு நோய்களுக்காகத் தொடர்ந்து மாத்திரைகளைச் சாப்பிடும்போது அவற்றின் பக்க விளைவாகவும் காது இரைச்சல் ஏற்படலாம். எடுத்துக்காட்டாகக் காசநோய், மலேரியா, மன நோய், புற்றுநோய், இதயநோய் போன்றவற்றுக்குத் தரப்படுகிற சில மாத்திரை, மருந்து, ஊசிகள் இம்மாதிரியான பக்கவிளைவைக் கொண்டுள்ளன. நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் மாத்திரைகளில் 200-க்கும் மேற்பட்டவை காது இரைச்சலுக்குக் காரணமாகலாம் என்கிறது மத்தியச் சுகாதாரத் துறை.
என்ன சிகிச்சை?
ஆடியோகிராம், HRCT ஸ்கேன், MRI ஸ்கேன், MRN ஸ்கேன், MRA ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் மூலம் காது இரைச்சலுக்குக் காரணம் கண்டறிந்து சிகிச்சை பெற்றால் இது முழுமையாகக் குணமாகும்.
முள்ளை முள்ளால் எடுப்பது போல் காது இரைச்சல் உள்ளவர்களின் காதுக்குள் அந்த இரைச்சலுக்குச் சவால்விடும் வகையில் அதிக டெசிபல் உள்ள மற்றொரு ஒலியைச் செலுத்தினால், இரைச்சலின் கொடுமையை உணரவிடாமல் அது தடுத்துவிடும். இதற்கு ‘மறையொலி தொழில்நுட்பம்’ (Masking technique) என்று பெயர். வாக்மேனின் இயர்போன்மாதிரி ‘மறையொலிக் கருவி’யை (Masker) காதில் பொருத்தி, இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
எலும்பு முடக்க நோய் காரணமாகக் காதுக்குள் இரைச்சல் ஏற்படுமானால், அங்கவடி எலும்பைச் சீராக்கும் அறுவைச் சிகிச்சை (Stapedectomy) மேற்கொள்ளப்படும். காது இரைச்சலால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்காதை முற்றிலும் செயலிழக்கச் செய்யும் அறுவை சிகிச்சையும் (Labyrinthectomy) நடைமுறையில் உள்ளது. காது இரைச்சலுக்கு டி.ஆர்.டி. (TRT – Tinnitus retraining therapy), டி.எம்.எஸ். (TMS – Transcranial Magnetic Stimulation) எனும் சிகிச்சைகள் இப்போது பிரபலமாகிவருகின்றன.