அம்பேத்காரின் சொந்த ஊருக்கு செல்ல ராகுல்காந்தி திட்டம். பாஜக எதிர்ப்பு

rahul gandhiகாங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரும், சோனியா காந்தியின் மகனுமாகிய ராகுல்காந்தி, சில நாட்களுக்கு முன் ஓய்வில் இருந்து திரும்பி வந்தவுடன் முழு வேகத்தில் கட்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில் ராகுல்காந்தி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மோடி ஆட்சியை விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் வரும் ஜூன் மாதம் 2ஆம் தேதி சட்டமேதை அம்பேத்கார் பிறந்த ஊரில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு சமீபத்தில் பாதயாத்திரை சென்ற ராகுல்காந்தி அடுத்தகட்டமாக  மத்திய பிரதேச மாநிலம் மவூ பகுதியில் உள்ள அம்பேத்கார் பிறந்த ஊருக்கு செல்ல முடிவு செய்துள்ளார். வருகிற ஜூன் மாதம் 2ஆம்தேதி அவர் அங்கு செல்லவிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் உறுதி செய்துள்ளது.

ராகுலின் மவூ வருகைக்கான ஏற்பாடுகளை மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய்சிங் செய்து வருகிறார். அம்பேத்காருக்கு நெருக்கமானவர்களை ராகுல் நேரில் சந்தித்து பேசவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மவூ பகுதிக்கு ராகுல் வருகை தருவதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ராகுல் காந்தி அம்பேத்காரின் விசுவாசி போல நாடகமாட முயல்கிறார். அவர் நாடகத்தை கண்டு அம்பேத்கார் ஆதரவாளர்கள் ஏமாறமாட்டார்கள் என்று அக்கட்சியின் மத்தியபிரதேச தலைவர் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க.வின் இந்த விமர்சனத்தை கண்டு கொள்ளாத காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் சுற்றுப் பயணத்துக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறார்கள். சில கிராமங்களில் விவசாயிகள் வீட்டுக்கு ராகுலை அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply