ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் கடந்த சில மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இன்று வங்கி ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் மும்பையில் கையெழுத்தானது. இந்திய வங்கிகள் சங்கமும், வங்கி ஊழியர்களுக்கான தொழிற்சங்கமும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்த ஒப்பந்தத்தின்படி கடந்த 01.11.2012 தேதி முதல் கணக்கிட்டு 15 சதவீதம் ஊதியம் உயர்வு வழங்க இந்திய வங்கிகள் சங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய ஒப்பந்தத்தால் வங்கிகளின் பணியாற்றும் சுமார் 8 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும் இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 4725 கோடி கூடுதல் செலவாகும் என்றும் கூறப்படுகிறது.
பாரத ஸ்டேட் வங்கி உள்படஅனைத்து வங்கிகளுக்கும் 2-ஆவது சனிக்கிழமை, 4-ஆவது சனிக்கிழமை விடுமுறை விடுவது குறித்து மத்திய அரசு விரைவில் முடிவு செய்யும் என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் சி.எச்.வெங்கடாசலம் கூறினார். இதற்கு பதிலாக மற்ற சனிக்கிழமைகளில் முழு நேரமும் வங்கிகள் செயல்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.