ஜெயலலிதா தொகுதிக்கு தேர்தல் தேதி அறிவிப்பு.

jayalalithaசொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் முதலமைச்சர் ஆகியுள்ள ஜெயலலிதா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் சட்டமன்ற தொகுதியான ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதிக்கு வரும் ஜூன் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முதலமைச்சராக பதவியேற்கும் ஒருவர் 6 மாத காலத்திற்குள் எம்.எல்.ஏ.வாக வேண்டும் என்ற விதி இருப்பதால் தற்போது காலியாக உள்ள ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் ஜெயலலிதா கண்டிப்பாக போட்டியிடுவார் என எதிர்பார்க்கபடுகிறது.

இந்த தொகுதிக்கு ஜூன் 3ஆம் தேதி மனுத்தாக்கல் தொடங்கவுள்ளதாகவும், மனுத்தாக்கல் செய்ய ஜூன் 10ஆம் தேதி கடைசி நாள் என்றும் மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 11ஆம் தேதி நடைபெறும் என்றும் மனுக்களை திரும்பப் பெற ஜூன் 13ஆம் தேதி கடைசி நாள் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த இடைத்தேர்தலின் வாக்குகள் ஜூன் 30 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், ஜூன் 27ல் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியை போல் கேரளாவின் அருவிக்கரா, மத்திய பிரேசத்தின் கரோத், திரிபுராவின் பிரதாப்கர், கர்மா, மேகாலயாவின் சோக்போட் ஆகிய தொகுதிகளுக்கும் ஜூன் 27ல் இடைத்தேர்தல் நடக்கிறது.

Leave a Reply