ஜெயலலிதா வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பு இறுதியானது அல்ல என்றும் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் ஆராய்ந்து உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்றும் எத்தனை தடைகள் வந்தாலும் இறுதியில் நீதி வெல்லும் என திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது:
கடந்த மே 11-ம் தேதி ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததும், நீதி வென்றதாக ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார். கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், மிகப்பெரிய அளவில் கணிதப்பிழை இருப்பதை பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர். இத்தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள் என பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
இது தவறான தீர்ப்பு என தெரிந்ததால்தான் முதலில் திட்டமிட்டவாறு பதவியேற்காமல் பின்னர் பதவியேற்றுள்ளார். இந்த வழக்கில் உண்மை நிலைநாட்டப்பட வேண்டும் என்பது நடுநிலையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், சட்ட வல்லுநர்களின் விருப்பம். கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பு இறுதியானது அல்ல. உச்ச நீதிமன்றம் இதை ஆராய்ந்து உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும்.
இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டிய பொறுப்பு கர்நாடக அரசு, சுப்பிரமணியன் சுவாமி மற்றும் திமுகவுக்கு உள்ளது. எனவேதான் கடந்த 25-ம் தேதி நடந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக உறுதியாக மேல்முறையீடு செய்யும் என அறிவித்தேன். நீதியின் ராஜபாட்டையில் எத்தனை தடைக்கற்கள் வந்து விழுந்தாலும், அவற்றை படிக்கற்களாக்கி இறுதியில் நீதி வெல்லும். இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.