ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகள் மட்டுமின்றி உலகெங்கிலும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். படித்த வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் பெண்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு அல்லது பெரும் தொகை கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறப்பட்டு இந்த தீவிரவாத இயக்கத்திற்கு ஆட்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வங்காள தேசத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துக்கு ஆள்சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக நேற்று இரண்டு நபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் கோக-கோலா நிறுவனத்தின் ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்காள தேசத்தில் தடை செய்யப்பட்ட வங்காள ஜமாதுல் முஜாகுதீன் அமைப்பைச் சேர்ந்த 30 வயது அமினுல் இஸ்லாம் என்ற இளைஞர் மற்றும் சாமிக் கமல் என்ற மற்றொருவர் ஆகிய இருவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்திற்கு ஆள் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டதாக வங்கதேச போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரில் ஒருவர் தங்களது ஊழியர் தான் என்பதை கோக-கோலா நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது.