முன்னதாக டிராய் தலைவர் பைஜல், தான் எழுதிய புத்தகம் ஒன்றில் ‘2ஜி விவகார்த்தில் ஒத்துழைக்காவிட்டால் தீங்கு விளையும் என்று தன்னிடம் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் எச்சரித்ததாக தெரிவித்திருந்தார். இதற்கு மன்மோகன் சிங் பதிலளித்தபோது, “என்றைக்கும் பொது அலுவலகத்தை சொந்தப் பயன்களுக்காக நான் பயன்படுத்திக் கொண்டதில்லை என்றும் யாரையும் மிரட்ட வேண்டிய அவசியமும் எனக்கு இருந்ததில்லை’ என்று கூறியுள்ளார்.
தன்மீதான குற்றச்சாட்டுக்கு அவரது தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட சிலமணி நேரத்தில் மன்மோகன் சிங், பிரதமர் மோடியை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மன்மோகன் சிங் உடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்தபோது, ‘“டாக்டர் மன்மோகன்சிங்கை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். 7 ரேஸ்கோர்ஸ் சாலைக்கு மீண்டும் வந்த மன்மோகனை வரவேற்றேன். நாங்கள் சிறப்பானதொரு சந்திப்பை மேற்கொண்டோம்” என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் ஓராண்டு ஆட்சியை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் முன்னாள் மற்றும் இந்நாள் பிரதமர்களின் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.