பாபஹர ஜெயந்தி

temple_top

பத்துவித பாவம் போக்கும் வைகாசி: வசந்தம் தரும் வைகாசி மாதத்தை மாதவ மாதம் வைசாகம் என்றும் அழைப்பதுண்டு. வைகாசி என்னும் சொல்லில் காசி என்னும் சொல்லும் இருப்பதால், இம்மாதத்தில் காசியில் கால்வைப்பது போற்றப்படுகிறது. ஏனெனில் பகீரதன் செய்த கடுந்தவத்தின் பயனாக, வைகாசி மாத வளர்பிறை திரிதியை திதியும் செவ்வாய்கிழமையும் அஸ்த நட்சத்திரமும் கூடிய நன்னாளில் கங்கை பூமிக்கு வந்ததாக புராணங்கள் பகர்கின்றன. கங்கை மூன்று உலகிலும் ஓடுவதால் திரிபதகாமினி, த்ரைலோகி என்றெல்லாம் போற்றப்படுகிறாள். காசிக்கு செல்ல வாய்ப்பில்லாதவர்கள் தமிழகத்தில் காசிக்குச் சமமான திருத்தலங்களுக்குச் சென்று அங்குள்ள புனிதத் தீர்த்தத்தில் நீராடலாம். அவற்றில் சில.

திருவாரூர் மாவட்டம், கூத்தனூர், அருகில் ஓடும் ஆறுக்கு ருத்ரகங்கை என்று பெயர். இங்கு மூன்று ஆறுகள் சங்கமமாவதால் திரிவேணி என்றும் சொல்வர் இதில் நீராடினால் கங்கையில் நீராடிய பலன் கிட்டும். திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது விஸ்வேஸ்வரர் திருக்கோயில், பாண்டவர்கள் அஞ்ஞாத வாசத்தின்போது இத்தல இறைவனை வழிப்பட்டுப் பேறுபெற்றார்கள் என்று மகாபாரதம் கூறுகிறது. கங்கையும் இங்கே வழிபட்டுப் பேறுபெற்றாள். கங்காதேவி இங்கே கிணற்றிலுள்ள தீர்த்தமாகவும் சிலா ரூபத்திலும் காட்சிதருகிறாள். இங்கே நீராடி பிதுர் பூஜை செய்தால் கங்கையில் நீராடிய பலன்களைப் பெறலாம். திருச்செந்தூர் கடலில் தினமும் மதியம் பன்னிரண்டு மணியளவில் கங்கை எழுந்தருள்வதாக ஐதீகம். அந்த நேரத்தில் கோயில் அர்ச்சகர் கடல்தீர்த்தத்திற்கு தீபாராதனை மற்றும் வழிபாடுகள் செய்வார் அப்போது கடலில் நீராடி கடலை வழிபட்டால் கங்கையை வழிபட்ட பலன் கிட்டும்.

காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் கோயிலுள்ள சிவகங்கை தீர்த்தத்தில் நீராடினாலும் கங்கையில் நீராடிய பலனைப் பெறலாம். சிதம்பரம் தலத்தில் உள்ள சிவகங்கை தீர்த்தத்தில் நீராடினாலும் மேற்சொன்ன புண்ணியம் கிட்டும். கோடியக்கரையில் மணிகர்ணிகா தீர்த்தம் உள்ளது. இதில் கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவேரி போன்ற நதிகள் மக்கள் தங்களிடம் கரைத்த பாவக் கறைகளைப் போக்கிக் கொள்ள நீராடியதாகப் புராணம் கூறுகிறது. எனவே இத்தீர்த்தத்தில் நீராடினாலும் பாவங்கள் நீங்கி சுகம்பெறலாம். மேற்கண்ட தீர்த்தத் தலங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் தங்கள் ஊருக்கு அருகிலுள்ள புனித ஆறு, தீர்த்தக்குளத்தில் நீராடியும் பலன் பெறலாம். வைகாசி மாதம் பல சிறப்புகளைப் பெற்றுத் திகழ்கிறது. அதிலொன்று வைகாசி மாத வளர்பிறை தசமியில் அஸ்த நட்சத்திரம் சேர்ந்துவரும். தசஹர புண்ணிய காலமும் ஒன்று இந்த நாளில்தான் ஸ்ரீராமபிரான் சேதுக்கரையில் ஈஸ்வரனை மணலில் லிங்கமாகப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக புராணம் பகர்கிறது. வைகாசி மாத வளர்பிறை தசமி திதியானது பத்துவிதப் பாவங்களைப் போக்கும் புண்ணிய நாளாகும். இந்த தினத்தை பாபஹரதசமி என்பார்கள். அந்நாளில் ராமேஸ்வரத்தில் புனித தீர்த்தங்களில் நீராடி சிவபிரானை வழிபட்டால் பத்து பாவங்கள் நீங்கி அளவற்ற புண்ணியம் கிடைக்கும். என்று ஸ்ரீஸ்காந்தம் கூறுகிறது.  

பத்து பாவங்கள்? வாக்கினால் செய்வது நான்கு: கடுஞ்சொல்: உண்மையில்லாத பேச்சு: அவதூறு பேசுவது; அறிவுக்குப் பொருந்தாமல் ஏடாகூடமாகப் பேசுவது இவைதான் வாக்கினால் செய்யப்படும் பாவங்கள்.  சரீரத்தால் செய்வது மூன்று: நமக்குக் கொடுக்கப்படாத பொருட்களை யாருக்கும் தெரியாமல் எடுத்துக் கொள்வது அதாவது திருடுவது; அநியாயமாய் பிறரைத் துன்புறுத்துவது; பிறர் மனைவிமீது ஆசைப்படுவது. மனதால் செய்வது மூன்று: மற்றவர் பொருளை அடைய திட்டமிடுவது; தீமையான செயல்களை எண்ணுதல்; பிற பொருட்களிடமும் மனிதர்களிடமும் தவறான-பொய்யான ஆசைகொள்ளுதல். இந்த பத்து பாவங்களும் வைகாசி வளர்பிறை தசமியன்று சேதுவில் நீராடினால் நீங்கும்.

ஒவ்வொரு வருடமும் ராமேஸ்வரம் செல்வது எல்லாராலும் இயலாத காரியம். எனவே அந்தப் புண்ணிய காலத்தில் நீங்கள் வசிக்கும் ஊரிலுள்ள நதியிலோ, குளத்திலோ, நீராடலாம், அதுவும் இயலாதவர்கள் வீட்டிலேயே சிவபெருமானையும் திருமாலையும் நினைத்து இனிமேல் பாவங்கள் செய்யமாட்டேன் என்று சொல்லிக் கொண்டு நீராடி இறை வழிபாடு செய்யலாம். தசமியில் நீராடி வழிபட இயலாதவர்கள் வைகாசிப் பவுர்ணமியில் இதனைக் கடைப்பிடித்து பாவங்களைப் போக்கிக் கொள்ளலாம். முருகப் பெருமான் அவதரிக்கக் காரணமான சிவபெருமான் அபிஷேகப்பிரியர், அவருக்கு வைகாசிப் பவுர்ணமியில் 18 வகையான அபிஷேகங்கள் புகழ்பெற்ற சிவன் கோயில்களிலும் நடைபெறுகிறது. அன்று அம்பாளுக்கு சந்தானாபிஷேகம் செய்து, செந்தாமரை மலர், அலரிப்பூ, செவ்வந்திப்பூ, ஆகிய மலர் மாலைகளை அணிவித்து ஆராதனை செய்து வழிபட்டால் லட்சுமி, கடாட்சம் நிறைந்து காணப்படும்.

வைகாசி மாத மதி நிறைந்த நன்னாளில்தான் புத்தர் அவதரித்தார் இதனை புத்தபூர்ணிமா என்று பவுத்தர்கள் கொண்டாடுவர். புத்தர் அரண்மனையைத் துறந்து, போதி மரத்தடியில் அமர்ந்து தவம் செய்து ஞானம் பெற்ற திருநாளும் வைகாசிப் பவுர்ணமியே அதேபோல் அவர் மோட்சம் அடைந்ததும் இந்நாளில்தான் என்று வரலாறு கூறுகிறது. ஜோதி வழிபாடு ஜீவகாருண்யம் முதலானவற்றை இந்த உலகிற்கு போதித்த ராமலிங்க வள்ளலார். வடலூரில் சத்திய ஞானசபை என்னும் அமைப்பைத் தோற்றுவித்து அங்கே தர்மசாலையையும் நிறுவினார். இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் ஒரு வைகாசிப் பவுர்ணமியில்தான் நடந்தன. தெற்கு திசையில் திக்பாலகரான எமதர்மராஜனுக்குரியது வைகாசி விசாகமே இந்நாளில் எமதர்மராஜன் அருள்புரியும். கோயில்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெறும். குறிப்பாக ஸ்ரீவாஞ்சியும், திருப்பைஞ்ஞீலி, திருக்கடையூர் ஆகிய தலங்களில் சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். குருவின் நட்சத்திரம் விசாகம் அன்று நவ கிரகத்திலிருக்கும் குரு பகவானுக்கு சந்தனாபிஷேகம் செய்து மஞ்சள் ஆடை அணிவித்து மஞ்சள் நிற மலர்களாலான மாலை அணிவித்து வழிபட்டால் குரு தோஷம் இருந்தால் விலகும். மேலும் கல்வி, கேள்வி, ஞானத்திலும் சிறந்து விளங்கலாம்.

நம்மாழ்வார் அவதரித்ததும் விசாக நட்சத்திரமாகும். வைகாசி விசாகத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலின் கருடசேவை விழா நடைபெறும். பல பெருமைகள் பெற்ற வைகாசிப் பவுர்ணமியில் (விசாகம்) காலையில் புனிதத் தீர்த்தத்தில் நீராடி, அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று அங்கு அருள்புரியும், தெய்வங்களை வழிபட வாழ்வில் என்றும் வசந்தம் வீசும்.

Leave a Reply