தமிழக மக்களின் நலன், முன்னேற்றம் ஆகியவை குறித்து தினந்தோறும் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களின் மகன் அன்புமணி ராமதாஸ், தன்னுடைய தருமபுரி நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட 5 கோடி ரூபாய் நிதியை திருப்பி அனுப்பியதாக வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக செய்திகள் பரவிக்கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பாராளுமன்ற கூட்டத்தொடர் நடந்த போது கூட்ட தொடருக்கு செல்லாமல் மிகக்குறைந்த வருகை பதிவேட்டினையும் அன்புமணி ராமதாஸ் பெற்றுள்ளதாகவும் செய்திகள் பரவி வருகின்றது.
ஆனால் இந்த செய்தியை பாமக நிறுவனர் ராமதாஸ் உறுதியாக மறுத்துள்ளார். கோவையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராமதாஸ், “தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தனது தொகுதி மேம்பாட்டு நிதியை திட்டங்களுக்கு எதுவும் ஒதுக்கவில்லை என்பது தவறான குற்றச்சாட்டு. அவரது தொகுதிக்கு வந்த நிதியினை அவர் மக்கள் திட்டங்களுக்கு ஒதுக்கியுள்ளார் என்பதே உண்மை என்று தெரிவித்துள்ளார்.
வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற பொய்யான செய்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர்கள் காவல்துறையினர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.