லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்திற்குள் பாகிஸ்தான் ஜிம்பாப்வே அணிகள் மோதிய போட்டியின் போது வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு நுழைய முயன்ற மர்ம நபர் ஒருவரை போலீஸார் தடுத்து நிறுத்தியபோது அந்த மர்ம நபரின் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டு வெடித்ததால் இருவருமே உயிரிழந்தனர். மர்ம நபர் மைதானத்தில் செல்லாத வகையில் தடுக்கப்பட்டதால் நூலிழையில் ஜிம்பாவே வீரர்கள் உயிர் பிழைத்தனர். இதனால் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி தற்போது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. நேற்று லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் பாகிஸ்தான்- ஜிம்பாப்வே அணிகள் மோதிய 2வது கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த பகலிரவு போட்டியை காண 20 ஆயிரம் ரசிகர்கள் திரண்டிருந்தனர். நேற்று இரவு 9 மணியளவில் போட்டி நடந்து கொண்டிருக்கும் போது, மைதானத்திற்குள் நுழைய முயன்ற ஒருவரை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது அந்த நபர் தனது உடலில் கட்டியிருந்து வெடிகுண்டுகளை வெடிக்க செய்ததில் அந்த நபரும் சோதனையிட்ட போலீஸ் அதிகாரியும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக முண்ணுக்கு பின் முரணாண தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன. தொடக்கத்தில் கடாஃபி ஸ்டேடியம் அருகே உள்ள ட்ரான்ஸ்பார்ம் வெடித்து சிதறியதாக கூறப்பட்டது.
தற்போது பாகிஸ்தான் செய்தித்துறை அமைச்சர் பர்வேஷ் ரஷீத், கடாஃபி மைதானம் அருகே மனித வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றதாகவும் இருவர் உயிரிழந்ததையும் உறுதி செய்துள்ளார். ஆனால் இந்த மனித வெடிகுண்டு தாக்குதலால் கிரிக்கெட் போட்டி நிறுத்தப்படவில்லை. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.