இன்று வைகாசி விசாகம். திருச்செந்தூரில் சிறப்பு ஏற்பாடுகள்.

vaigasiதமிழ்க்கடவுள் முருகனின் முக்கிய விசேஷ நாட்களில் ஒன்று வைகாசி விசாகம். இன்று தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளிலும் வைகாசி விசாகம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் திருச்செந்தூரில் மிகச்சிறப்பாக இந்த விழா பக்தர்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று அதிகாலை முதல் திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர்.

முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திர திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா, வசந்த விழாவாக கடந்த மே மாதம் 23ஆம் தேதி தொடங்கி இன்று நிறைவு பெறுகிறது.

இவ்விழாவின் நிறைவு நாளான இன்று விசாகத் திருவிழாவை முன்னிட்டு கோயில் அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2.00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்று வருகிறது.

வைகாசி விசாக விழாவை முன்னிட்டு, கடந்த சில நாள்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து விரதமிருந்து, பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் நேற்று காலை முதலே திருக்கோயிலில் குவியத் தொடங்கினர். நடை திறந்தவுடன் சுவாமியை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் நள்ளிரவு முதலே நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

பாதுகாப்புப் பணியில் கூடுதலான காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். தயார் நிலையில் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அவசர மருத்துவ ஊர்தியும் நிறுத்தப்பட்டுள்ளன. பக்தர்கள் வசதிக்காக பல்வேறு வழித்தடங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Leave a Reply