வாகனம் ஓட்டும் போது ஸ்மார்ட் போன் உபயோகிப்பது சட்டத்திற்கு புறம்பானது என்பதை அடுத்து தற்போது ஸ்மார்ட் வாட்ச் உபயோகிப்பதும் குற்றம்தான் என்று அதிகாரபூர்வமாக கனடா நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கனடாவை அடுத்து பல்வேறு நாடுகளிலும் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனடா நாட்டை சேர்ந்த ஜெப்ரி மசெசின் என்பவர் தனது காதலர் வாங்கிக்கொடுத்த ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சை கையில் கட்டிக் கொண்டு, ஸ்மார்ட் போனுடன் இணைக்கப்பட்டிருந்த ஸ்மார்ட் வாட்சில் பாடலை மாற்றிக் கொண்டிருந்தபடி காரில் சென்றபோது அவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டதாகவும், அவருக்கு 120 கனடிய டாலர்கள் அபராதமாக விதித்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
தான் கைது செய்யப்பட்டதால் அதிர்ச்சியடைந்த ஜெப்ரி, தான் கையில் கட்டியிருந்த ஸ்மார்ட் வாட்சைத்தான் உபயோகித்ததாகவும், ப்ளூடூத் ஹெட்செட் போன்று உடலோடு பொருந்தியிருக்கும் ஒரு சாதனத்தை உபயோகிப்பது குற்றமா? என்றும் வாதிட்டார். ஆனால், இவருக்கு அபராதம் விதித்த போலீசாரோ, வண்டி ஓட்டும் போது கைபேசியுடன் தொடர்புடைய எந்த சாதனத்தை இயக்கினாலும் அது கைபேசியை இயக்குவதைப் போல குற்றம் தான் என்று தெரிவித்துள்ளனர்.
இதனால் ஸ்மார்ட் வாட்ச் உபயோகிப்பவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.