ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக கர்நாடக அரசு நேற்று அறிவித்ததை அடுத்து ஜெயலலிதாவின் முதல்வர் பதவிக்கு மீண்டும் ஆபத்து வர வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து இவ்வழக்கில் கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜரான ஆச்சார்யா நேற்று அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியபோது, சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டின் போது, உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை கோர முடியும் என்று கூறியுள்ளார். மேலும் மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக அரசு அனுமதி தந்தால் அரசு வழக்கறிஞராக ஆஜராக தயார் என்றும் ஆச்சார்யா விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை மேல்முறையீட்டின்போது உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்கப்பட்டால் ஜெயலலிதாவின் முதல்வர் பதவி மீண்டும் பறிபோவது மட்டுமின்றி அவர் மீண்டும் சிறை செல்லவும் வாய்ப்பு இருப்பதாக வழக்கறிஞர் ஒருவர் கூறியுள்ளார். இந்த திடீர் நெருக்கடியால் ஜெயலலிதா தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கர்நாடக அரசு அப்பீல் முடிவு ஆர்.கே.நகர் தேர்தல் முடிவை பாதிக்குமா? என்பது குறித்தும் அதிமுகவினர் கவலை கொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.