வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக உள்பட பல எதிர்க்கட்சிகள் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடுவதில்லை என முடிவெடுத்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தும் அதே மனநிலையில்தான் இருந்தார். ஆனால் ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்வது என நேற்று கர்நாடக அரசு தீர்மானம் செய்ததில் இருந்து திடீரென மனமாற்றம் அடைந்த விஜயகாந்த், இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் எண்ணத்துக்கு வந்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சி, தேமுதிக இந்த தொகுதியில் நின்றால் ஆதரவு தர தயார் என அறிவித்த நிலையில் திமுக உள்பட மற்ற கட்சிகளின் ஆதரவோடு தேர்தலில் களம் காண கேப்டன் முடிவு செய்துவிட்டதாக தேமுதிக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பாக பேச்சு அடிபடுகிறது.
தேமுதிக மாவட்டச் செயலாளர்களுடன் விஜயகாந்த் சென்னையில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், இடைத்தேர்தல் தொடர்பாக மாவட்ட செயலாளர்களின் கருத்துக்களை விஜயகாந்த் கேட்டறிந்த விஜயகாந்த், இன்று அல்லது நாளைக்குள் விஜயகாந்த் தனது அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிகிறது. இந்த தேர்தலில் தேமுதிக போட்டியிடும் என முடிவு செய்தால் ஜெயலலிதாவை எதிர்த்து பிரேமலதா வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என கூறப்படுகிறது.