காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருடசேவை, நேற்று கோலாகலமாக நடந்தது. காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம், கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த திருவிழாவின் மூன்றாம் நாள் கருடசேவை உற்சவம், நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு, நேற்று அதிகாலை 1:30 மணியளவில், வரதராஜ பெருமாளுக்கு திருமஞ்சனமும், சிறப்பு பூஜையும் நடைபெற்றன. தொடர்ந்து, அதிகாலை 2:30 மணியளவில், வாகன மண்டபத்தில் கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். தொடர்ந்து, 4:55க்கு கோபுர தரிசனம் நடைபெற்றது. காலை 6:00 மணியளவில், விளக்கொளி பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அங்கிருந்து, பிள்ளையார்பாளையம், புத்தேரி தெரு வழியாக கச்சபேஸ்வரர் கோவிலை சென்றடைந்தார். அங்கு, பெருமாளுக்கு குடை மாற்றப்பட்டது. அங்கிருந்து, ராஜவீதிகள் வழியாக பவனி வந்து, பிற்பகல் 12:55க்கு மீண்டும் கோவிலை சென்றடைந்தார். வழி நெடுகிலும் வரதராஜ பெருமாளை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
விஜயராகவ பெருமாள்: திருத்தணி கோட்டா ஆறுமுக சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள விஜயராகவ பெருமாள் கோவிலில், நேற்று, கருடசேவை விழா நடந்தது. விழாவை ஒட்டி, திருத்தணி நகர மளிகை வியாபாரிகள் சங்கம் சார்பில், காலை, 6:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின், காலை, 7:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட டிராக்டரில் கருட வாகனத்தில் உற்சவர் பெருமாள் எழுந்தருளினார். பின், நகர வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஆயிரம் பேருக்கு…: மாலை, 3:00 மணிக்கு ம.பொ.சி., சாலையில் உள்ள சுந்தரவிநாயகர் கோவிலில், உற்சவர் விஜயராகவ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின், மீண்டும் வீதியுலா புறப்பட்டு நகராட்சியில் அனைத்து வீதிகளிலும் வந்து இரவு, 10:00 மணிக்கு கோவில் வளாகம் அடைந்தார். மதியம், ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.