டெல்லி ஆளுனரின் அனுமதியை ஒபாமாவும் பெற வேண்டுமா? ஆம் ஆத்மி தலைவர் கிண்டல்

aam aadhmiடெல்லியில் கடந்த சில நாட்களாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் துணை நிலை ஆளுனர் நஜீப் ஜங் அவர்களுக்கும் இடையே மோதல்கள் நடந்து வரும் நிலையில் ஊழல் ஒழிப்புப் பிரிவில் பிகாரைச் சேர்ந்த 5 அதிகாரிகளை சேர்க்க டெல்லி அரசுக்கு அதிகாரம் இல்லை என்று டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் தெரிவித்துள்ள கருத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு கடும் விமர்சனம் செய்துள்ள ஆம் ஆத்மி கட்சி, ஊழல் செய்பவர்கள் மட்டுமே ஊழல் ஒழிப்பு குறித்து பயப்படவேண்டும், மத்திய அரசு எந்திரம் ஏன் பயப்படுகிறது என்று புரியவில்லை என்று அக்கட்சி விமர்சித்துள்ளது.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர் அஷுதோஷ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஊழல் ஒழிப்பு பிரிவு துணை நிலை ஆளுநரின் அதிகார எல்லைக்கு உட்பட்டது இல்லை. ஆனால் ஆளுநர் நஜீப் ஜங், தனது அதிகார எல்லைக்குள் ஊழல் ஒழிப்பு பிரிவு இருப்பதாக அறிக்கை அளித்திருப்பது வேடிக்கையாக உள்ளது.

இப்படியே போய்க்கொண்டிருந்தால் நாளை அமெரிக்க அதிபர் ஒபாமா ஏதாவது விசாரணை நடத்த வேண்டுமென்றால் கூட டெல்லி துணைநிலை ஆளுநர் அனுமதி பெற வேண்டும் என்று கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் அலுவலகத்தில் அனுமதி கேட்டு ஆம் ஆத்மி கட்சி இந்த 5 உயரதிகாரிகளையும் ஊழல் ஒழிப்புப் பிரிவில் சேர்த்துள்ளது.

“ஆனால் நஜீப் ஜங், இது டெல்லி அரசின் அதிகாரத்துக்குட்பட்டதல்ல என்று கூறியுள்ளதையடுத்து அவர், தனது பதவியைத் தக்க வைக்க மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுகளுக்கு ‘அடிபணிகிறார்’. ஆகவே, துணைநிலை ஆளுநர் தனது பதவியை ஒரு ஜோக்கராக மாற வேண்டாம் என்று நான் அவரைக் கேட்டுக் கொள்கிறேன்.

ஊழலுக்கு எதிரான எங்கள் போராட்டம் அனைத்தையும் மத்திய அரசு முடக்கப்பார்க்கிறது” என்று அஷுடோஷ் கடுமையாக பேசியுள்ளார்.

Leave a Reply