விவசாயத் துறையில் நவீன காலகட்டத்துக்கு ஏற்ப தொழில்நுட்பமும் வளர்ந்து வருகிறது. இயற்கை விவசாயம், நவீன விவசாயம் என இரண்டு முறைகளிலும் புதிய புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் இது இரண்டும் இல்லாமலும் விவசாயத் துறையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல முடியும் என்கிறது ஹைட்ரோபோனிக் விவசாயம்.
இந்த தொழில்நுட்பத்தில் இயற்கை முறையில் வளர்ப்பதுபோலவே செடிகள் வளர்க்கப்படுகின்றன. ஹைட்ரோபோனிக் தொழில்நுட்ப இயந்திரத்திலிருந்து பக்கவாட்டிலோ அல்லது மேலாகவோ குழாய்கள் இணைக்கப்படுகின்றன. அந்த குழாய்களின் இடையில் துவாரங்கள் இடப்பட்டு அந்த இடத்தில் செடிகள் நடவேண்டும். இப்போது செடிகளுக்கு தேவையான சத்து இயந்திரம் மூலம் செலுத்தப்படுகிறது. அதாவது தண்ணீர் அளவு, அழுத்தம், சூரிய ஒளி மற்றும் இதர சத்துக்கள் கிரகிக்கும் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை கருவியின் மூலம் கணக்கிடப்படுகிறது. கருவியோடு இணைக்கப்பட்ட தொட்டியில் தண்ணீர் ஊற்றினால் மட்டும் போதும். வேறு எந்த இடுபொருட்களும் தேவையில்லை என்கிறது இந்த தொழில்நுட்பம். அடுக்குமாடி வீடுகளில் சுத்தமான காய் கனிகள் வேண்டும் என்பவர்கள் இந்த வகையில் பயிர்செய்யலாம்.