ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு பெய்த கனமழை காரணமாக வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு பொதுமக்களின் வீடுகள், உடமைகள் சேதமடைந்ததோடு, அந்த மாநிலத்தில் பயிர் சேதமும் பெருமளவு ஏற்பட்டு விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டத்தை கொடுத்தது.
இந்நிலையில் சமீபத்தில் வெள்ள நிவாரண பணி தொடர்பான நடவடிக்கைகளுக்கு ரூ. 400 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த பணத்தை மத்திய அரசிடம் இருந்து பெற்றுக்கொண்ட மாநில அரசு வெள்ளம் பாதித்த பகுதியில் உள்ள விவசாயிகளை சந்தித்து நஷ்ட ஈட்டுக்கான தொகையை காசோலைகளாக வழங்கி வருகிறது.
வெள்ளத்தால் சேதமான பயிர்களுக்கு உரிய நஷ்ட ஈடு கிடைத்துவிட்டது என காசோலையை சந்தோஷமாக வாங்கி பார்த்த விவசாயிகள் அதில் குறிப்பிட்டு இருந்த தொகையைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். பயிர் சேத இழப்பீடாக மாநில அரசு வெறும் ரூ.47 மட்டுமே வழங்கியிருந்ததாக காசோலையில் குறிப்பிடப்பட்டிருந்தது. குறைந்தபட்சமாக ரூ.47ம்,
அதிகபட்சமாக ரூ. 378ம் நஷ்ட ஈடு வழங்கப்பட்டதை அறிந்த விவசாயிகள் கண்ணீர் விட்டனர்.
வெள்ளத்தில் நாங்கள் வீடுகளை இழந்தோம், பயிர்களை இழந்தோம் ஆனால், நிவாரண தொகையாக வெறும் 47 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதையும் வங்கியில் போட்டுத்தான் எடுக்க வேண்டிய நிலை உள்ளதாக விவசாயி ஒருவர் வேதனையுடன் தெரிவித்தார். மற்றொரு விவசாயி கூறுகையில், எனக்கு ரூ.30 ஆயிரம் பயிர் சேதம் ஏற்பட்டது. அதற்கு ரூ. 100 நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது. மிகப் பெரிய நகைப்புக்குரியதாக உள்ளது என்றார்.
விவசாயிகளுக்கு மிக குறைந்த நஷ்ட ஈடு வழங்கியதற்கு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதான் ‘மோடி- முப்தி கூட்டணி’யின் பயன் என்று கூறியுள்ளார்.