சாதாரணமாக ஒரு மனிதன் ஐந்து பேர்களை எதிர்த்து சண்டை போட்டாலே ஜெயிப்பது கடினம். ஆனால் விஜய் நடித்துள்ள புலி படத்தில் அவர் சுமார் 1000 பேர்களை எதிர்த்து சண்டை போட்டுள்ளாராம். இந்த சண்டைக்காட்சி பிரமாண்டமாக வந்துள்ளதாகவும், இதற்கு ஹாலிவுட் சண்டைப்பயிற்சி இயக்குனர் சங் லீன் என்பவர் பயிற்சி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த தகவல் வெளிவந்தவுடன் இதுகுறித்து சமூக இணையதளங்கள் தனது வழக்கமான கலாய்ப்பு பணியை தொடங்கிவிட்டது. ஆயிரம் பேர்களுடன் சண்டை போடும் அபூர்வ வீரன் என்றும், பொம்மைகளுடன் சண்டை போட்டால் ஆயிரம் என்ன பத்தாயிரம் பேர்களுடன் சண்டை போடலாம்’ என்றும் டுவிட்டர், ஃபேஸ்புக்கில் பலர் கலாய்த்து வருகின்றனர். ஆனால் உண்மையில் இந்த சண்டைக்காட்சியை படமாக்க படக்குழுவினர் சுமார் 70 நாட்கள் கஷ்டப்பட்டதாகவும், குறிப்பாக இளையதளபதி விஜய் ஞாயிற்றுக்கிழமை கூட விடுமுறை எடுக்காமல் படம் நன்றாக வருவதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
சண்டைக்காட்சியை கலாய்ப்பது குறித்து படக்குழுவினர் கூறியபோது, இப்போது கலாய்ப்பவர்கள் இந்த படத்தை பார்த்தபின்னர் அதன் பிரமாண்டத்தை பார்த்து வாயை மூடிக் கொள்வார்கள் என்று கூறியுள்ளனர்.
புலி படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடித்துள்ளனர். நான் ஈ சுதீப், ஸ்ரீதேவி கபூர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விநாயகர் சதுர்த்தியன்று இப்படத்தை வெளியிட முடிவு செய்து அதற்கான பணிகளில் களமிறங்கியுள்ளனர். அதற்கு முன்னதாக விஜய் பிறந்தநாளில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.