விமான பயணத்தின்போது இஸ்லாமிய பெண் பயணி ஒருவர் மோசமாக நடத்தப்பட்ட விவகாரம் உலகம் முழுவதிலும் உள்ள ஊடகங்கள் மற்றும் சமூக வலை தளங்கள் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் வேறு வழியின்றி அந்த விமான நிறுவனம் தற்போது பாதிக்கப்பட்ட இஸ்லாமிய பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த இஸ்லாமிய பெண்ணான தஹேரா அகமத் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிகாகோ நகரில் இருந்து வாஷிங்டனுக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்தார். பயணத்தின் போது விமானப் பணிப்பெண்ணிடம் டின்னில் அடைக்கப்பட்டிருக்கும் ’டயட் கோக்’ கேட்டுள்ளார். அதற்கு பணிப்பெண் அவருக்கு டயட் கோக் தர முடியாது என மறுத்துள்ளார். ”ஏன் தர முடியாது?” என்ற அவரது கேள்விக்கு பணிப்பெண்ணின் பதில் “ நீங்கள் அதை ஆயுதமாக பயன்படுத்தக்கூடும். அதனால் தர முடியாது என்று கூறியதால் தஹேரா அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ஆனால் அவருக்கு அருகே இருந்த பயணியோ, சற்று முன் அந்த பணிப்பெண் கொடுத்த டின் பியரைத் திறந்து கூலாக குடித்துக் கொண்டிருந்தார். இதைக் சுட்டிக்காட்டி பணிப்பெண்ணிடம் புகார் செய்த தஹேராவை மற்ற பயணிகள் இஸ்லாமிய மதத்திற்கு எதிரான கருத்துக்களை கூறி அடக்கினர். வேறு வழியின்றி அமைதியாக தனது பயணத்தை தொடர்ந்தார் தஹேரா.
இந்த சம்பவம் சமூக வலைத்தளம் ஒன்றின் மூலம் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் வெளியே தெரிந்தது. டுவிட்டரில் #UnitedforTahera என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டது. தஹேராவை அவமதித்தை கண்டித்து யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை புறக்கணிக்கப் போவதாகவும் பலர் தெரிவித்தனர்.
இந்நிலையில் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தஹேராவிடம் மன்னிப்பு கேட்பதாகவும், இந்த சம்பவத்திற்கு காரணமான தங்கள் நிறுவனத்தின் துணை நிறுவனமான ’சியாட்டில் அமெரிக்கா’வின் பணிப்பெண், பணியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் அறிவித்துள்ளது.