மதுரையில் இருந்து சென்னைக்கு 59 நிமிடங்களில் பறந்து வந்த இதயம்

air indiaகடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஹிதேந்திரன் என்ற இளைஞர் மூளைச்சாவு அடைந்ததை அடுத்து அவரது இதயம் மிகக்குறுகிய நேரத்திற்குள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு இன்னொருவருக்கு பொருத்திய சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது. இந்த சம்பவத்திற்கு பின்னர்தான் உடலுறுப்பு தானம் குறித்து பொதுமக்களிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது. இதன் பின்னர் பல சம்பவங்கள் இதேபோன்று தமிழகத்திலும் இந்தியாவின் பல பகுதியிலும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இதே போன்ற ஒருசம்பவம் தற்போது நடந்துள்ளது.

மதுரையில் செயல்படும் ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்துக்கு மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இருந்து நேற்று காலை 11.20 மணிக்கு அழைப்பு ஒன்று வந்தது. அதில் ஏஐ 672 என்ற பயணிகள் விமானத்தின் மூலம் அறுவைச் சிகிச்சைக்காக குளிர்சாதனப் பெட்டியில் உறை நிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட செயல்படக்கூடிய இருதயத்தை குறிப்பிட்ட நேரத்தில் சென்னைக்கு கொண்டு செல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அதையடுத்து இருதயத்தை குறித்த நேரத்தில் கொண்டு செல்வதற்கான முயற்சிகளில் ஏர் இந்தியா நிறுவன அதிகாரிகள் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து வழக்கமாக விமானம் புறப்படும் நேரத்துக்கு 18 நிமிஷங்கள் முன்பாக, அதாவது பகல் 1.42 மணிக்கு குளிர்சாதனப் பெட்டியில் உறை நிலையில் இருந்த இருதயத்துடன் 2 பேர் அடங்கிய மருத்துவக் குழுவினர் மதுரையில் இருந்து புறப்பட்டனர். வழக்கமாக சென்னைக்கு பிற்பகல் 3 மணிக்கு வரும் அந்த விமானம், முன்னதாகவே புறப்பட்டதால் பிற்பகல் 2.41 மணிக்கு இருதயத்துடன் சென்னையில் தரை இறங்கியது. அதாவது மதுரையில் இருந்து சென்னைக்கு வெறும் 59 நிமிடங்களில் இதயம் பாதுகாப்பாக வந்து சேர்ந்தது. இதையடுத்து, இருதய மாற்று அறுவைச் சிகிச்சைக்கு உரிய மருத்துவமனைக்கு அந்த இருதயம் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது என்று ஏர் இந்தியா நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply