விஷால் நடித்து வரும் ‘பாயும் புலி’ திரைப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே பாக்கியுள்ள நிலையில் விஷால் தனது அடுத்த படத்திற்கான பூஜையை இன்று நடத்தியுள்ளார். பாண்டிராஜ் இயக்கவுள்ள இந்த புதிய படத்திற்கு ஆம்பள’ படத்தின் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கின்றார். விஷாலே இந்த படத்தை தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் பாயும் புலி’ படத்தை முடித்துவிட்டு விஷால் லிங்குசாமி இயக்கத்தில் ‘சண்டக்கோழி 2’ படத்தில் நடிப்பதாகத்தான் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ‘அஞ்சான்’ படம் படுதோல்வியை அடைந்ததால் விஷால் தனது முடிவை மாற்றிக்கொண்டதாக செய்திகள் பரவி வருகிறது.
ஆனால் சண்டக்கோழி 2′ படத்தின் திரைக்கதை வசனம் எழுதும் பணியை லிங்குசாமி இன்னும் முடிக்காததால்தான் விஷால் தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்திருப்பதாகவும், லிங்குசாமி அந்த படத்தின் பணியை முடித்துவிட்டு ரெடியானதும் விஷால் ‘சண்டக்கோழி 2’ படத்தில் கண்டிப்பாக நடிப்பார் என்றும் விஷால் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.