மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த பிரபலங்கள் மீது நடவடிக்கை குறித்து குஷ்பு கருத்து.

kushbooமேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக ரசாயனம் கலந்துள்ளதால் நாடு முழுவதும் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு பல மாநிலங்கள் தடை விதித்துள்ளது. தமிழக அரசும் மேகி நூடுல்ஸை சோதனை செய்ய உத்தரவுட்டுள்ளதால் எந்த நேரத்திலும் இங்கும் மேகி நூடுல்ஸ் உணவுப்பொருளுக்கு தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த அமிதாப், ப்ரியங்கா சோப்ரா, மாதுரி தீட்சித் ஆகியோர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் தேவைப்பட்டால் அவர்களை கைது செய்யவும் பீகார் மாநில நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து நடிகை குஷ்பு தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

“நெஸ்லே போன்ற ஒரு நிறுவனத்தின் உணவுப்பொருளை உணவு அமைப்பு அங்கீகரித்த பின்பே அது கடையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் பிரபலங்கள் மீது எப்படி பழிபோடுவீர்கள்? கடையில் ஒரு பொருள் விற்கப்படுவதற்கு முன்பு அதைச் சோதனை செய்யமாட்டார்களா? அல்லது அதை நாம் தலைகீழாகத்தான் செய்வோமா? முதலில் பொருள் வாங்கப்பட்டு, உடல்நலக் குறைவு ஏற்பட்டபிறகு சோதனை செய்வோமா?”  என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு பிரபல ஓட்டல் மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவனத்தில் நடித்த நடிகை ராதிகாவும், அந்தக் கல்வி நிறுவனத்துடனான தனது தொடர்பு வெறும் தொழில்ரீதியானது மட்டுமே, அந்த நிறுவனம் பற்றி பெற்றோர் நன்கு விசாரித்து தங்களது பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்றும் அதிரடியாக  அறிவிப்பை ஒன்றை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply