கடையில் விற்பனையாகும் அரிசியில் புழுக்கள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தால் அந்த கடை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுதான் நாடு முழுவதிலும் நடந்து வரும் நடைமுறை. ஆனால் கடையில் புழுக்கள் இருந்த அரிசியை கண்டுபிடித்த ஒரு அரசு அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஏனெனில் அவர் கண்டுபிடித்த அரிசி விற்பனை ஆன கடை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான கடை என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் மாநிலத்தின் நகர்ப்புறப்பகுதியில் அமைந்துள்ள ரிலையன்ஸ் ஸ்டோருக்கு சமீபத்தில் பரிசோதனைக்காக சென்ற அந்த அதிகாரி, அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அரிசியின் மாதிரியை எடுத்து ஆய்வு செய்தார். அப்போது அதில் புழுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து உணவுத்துறை அதிகாரிகளுக்கு அவர் அறிக்கை அளித்து கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார். இதையடுத்து அக்கடையில் உள்ள அரிசி பறிமுதல் செய்யப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், ஆய்வுக்கு சென்ற அதிகாரியை சஸ்பெண்ட் செய்து பஞ்சாப் அரசு உத்தரவிட்டது.
பெரிய தொழிலதிபர்களின் கடையில் அநியாயம் நடந்தால் அதை தட்டிக்கேட்க அரசு முன்வராமல் இதுபோன்ற ஒழுக்கமான அதிகாரியை தண்டிப்பது மிகவும் கொடுமையான செயல் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து கூறியுள்ளனர்.