இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் வரும் 10ஆம் தேதி முதல் ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாட உள்ளது. இந்நிலையில் வங்கதேச கிரிக்கெட் வீரரும், ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான கேப்டனுமான மஷ்ரபே மொர்டசா, சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார். இந்திய அணியுடன் மோதும் வங்கதேச அணியில் இவர் விளையாடவில்லை எனினும் இந்த விபத்தால் வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.
கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடுவதற்காக மிர்புரில் உள்ள ஷேர் இ பங்ளா மைதானத்துக்கு ஆட்டோவில், மொர்டசா சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பேருந்து ஒன்று ஆட்டோ மீது மோதியதால் விபத்து ஏற்பட்டதாகவும், இந்த விபத்தில் ஆட்டோவிலிருந்து வெளியே தூக்கியெறியப்பட்ட மொர்டசாவின் இரு கைகளிலும் காயம் ஏற்பட்டதாகவும் வங்கதேச கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மொர்டசா செய்தியாளர்களிடம் பேசியபோது கூறுகையில், சிக்கல் தரும் அளவுக்கு காயமடையவில்லை. ஆனால் கைகளில் சிராய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.