தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் சிறப்பு அரசு வழக்கறிஞராக ஆச்சார்யாயை நியமனம் செய்து கர்நாடக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் அவருக்கு உதவியாளராக வழக்கறிஞர் சந்தேஷ் சவுடாவையும் நியமித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டை வரும் ஜுலை 1-ம் தேதிக்கு பிறகு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்படும் என ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
“மேல்முறையீட்டு மனு தயாரிக்க ஓரிரு வாரங்கள் ஆகும். உச்சநீதிமன்ற விடுமுறை கால அமர்வு முன் மேல்முறையீடு செய்தால் அவசரத்திற்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பப்படும் என்பதால் ஜுலை 1-ம் தேதிக்கு பிறகே மனுத்தாக்கல் செய்யப்படும்.
ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுவித்து கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ஏராளமான தவறுகள் உள்ளன. கடன் தொகை கூட்டல் மட்டுமின்றி, குற்றம் சாட்டப்பட்டவர்களின் வருமானமும் தவறாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
குறிப்பாக ஜெயா பப்ளிகேஷன்ஸ் மூலம் தங்களுக்கு ரூ.1 கோடியே 15 லட்சம் வருமானம் வந்தததாக குற்றம் சாட்டபட்டவர்கள் கூறியுள்ள நிலையில் தீர்ப்பில் அது ரூ.4 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.2 கோடியே 85 லட்சம் எங்கே இருந்து வந்தது? குற்றம் சாட்டபட்டவர்கள் ஒப்புக் கொண்டுள்ளபடியே ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு அவரது வருமானத்தை விட 200 சதவீதம் அதிகம்” என்று அந்த பேட்டியில் ஆச்சார்யா மேலும் கூறியுள்ளார்.