தலிபான்களால் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாகி, மரணத்தோடு கடுமையாக போராடி, உயிர்பிழைத்த மலாலாவை கொல்ல முயன்ற வழக்கில் 25 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதாக கூறப்படும் 10 குற்றவாளிகளில் 8 பேர் விடுதலையாகி ரகசியமாக விடுதலை செய்யப்பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் சுவாத் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள மின்கோரா நகரில் அவர் வசித்தபோது தலிபான் தீவிரவாதிகள் பெண் குழந்தைகள் கல்வி பெறுவதை தடுக்கிறார்கள் என்று பி.பி.சி. வானொலியின் உருது சேவை நிகழ்ச்சிக்கு எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். ஒரு சிறுமி தனது நாட்டின் தீவிரவாதிகளுக்கு எதிராக குரல் கொடுத்தது உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. இதனால் ஆத்திரமடைந்த தலிபான் தீவிரவாதிகள் 2012-ம் ஆண்டு அக்டோபர் 9-ந் தேதி பள்ளிக் கூடத்துக்கு மலாலா பஸ்சில் சென்றபோது அவரை துப்பாக்கியால் சுட்டனர். தலையில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய அவர் இங்கிலாந்தின் பிரிமிங்காம் நகருக்கு கொண்டு செல்லப்பட்டு அந்நாட்டு மருத்துவர்களால் காப்பாற்றப்பட்டார்.
தற்போது 17 வயது சிறுமியாக இருக்கும் மலாலா மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக 10 தலிபான் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மூடிய அறையில் சுமார் மூன்றாண்டு காலமாக நடத்தப்பட்ட இந்த வழக்கில் 10 குற்றவாளிகளுக்கு தலா 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதாக கடந்த ஏப்ரல் மாதம் செய்திகள் வெளியாகின.
ஆனால், இந்த வழக்கில் 2 பேருக்கு மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், மீதி 8 பேருக்கு எதிராக குற்றத்தை நிரூபிக்க போதுமான ஆதாரம் இல்லை என விடுதலை செய்யப்பட்டதாகவும் ரகசிய செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன,
இந்த செய்தியை லண்டனில் உள்ள பாகிஸ்தான் உயர் தூதரக செய்தி தொடர்பாளரும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அவர்கள் 8 பேரும் ராணுவத்தின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டதாகவும், அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்களா? இல்லையா? என்பது தொடர்பாக எந்த தகவலும் இல்லை எனவும் ஸ்வாத் பகுதி போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்தின் பிரபல நாளேடான ‘டெய்லி மிரர்’, மலாலா கொலை முயற்சி வழக்கில் தண்டனை பெற்ற 10 பேரையும் பேட்டி காண முயன்றபோது, இவர்களில் இருவர் மட்டுமே பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்ற உண்மை தெரிய வந்தது. தீவிரவாதத்துக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப்போவதாக அவ்வப்போது வெற்று அறிக்கைகளை வெளியிட்டுவரும் பாகிஸ்தான் அரசின் நிஜமுகம் இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.