நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே தெற்கு பொய்கை நல்லூர் என்ற பகுதியில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு அமைக்கப்பட்டிருந்த கோயிலை தமிழக அரசு இரவோடு இரவாக இடித்து தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி அருகேயுள்ள தெற்கு பொய்கை நல்லூர் கிராமத்தினர் பேச்சியம்மனுக்கு புதிய கோவில் ஒன்றை கட்டி கும்பாபிஷேகம் நடத்தினர். இந்த கோயிலின் தெற்கு பகுதியில் தங்களது காவல்தெய்வத்திற்கு இரண்டு குதிரைகளை காவலாக சிமெண்ட் சிலையாக வடிவமைத்திருந்தனர். அதில் ஒன்று சுபாஷ் சந்திரபோஸ் குதிரையை பிடித்த படியும், மற்றொரு குதிரையை விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் துப்பாக்கி ஏந்திய படியும் சிலையாக வடிவமைத்திருந்தனர்.
இந்த சிலைகள் குறித்து அந்த கிராமத்தினர் கூறும்போது, “தமிழ் இனத்தையும், தமிழ் மக்களையும் பாதுகாத்த தலைவர்களின் சிலைகளை வடிவமைத்து அவர்களுக்கு வழிபாடு செய்வது நாங்கள் அவர்களுக்கு செலுத்தும் நன்றியாக கருதுகிறோம். இதனால் எங்களது குலதெய்வமாகி இஷ்ட தெய்வத்துடன் சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் பிரபாகரன் சிலையை வைத்து வழிபடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று கூறினர்.
இந்நிலையில் பிரபாகரனை சிலை வைத்து கும்பிடும் தகவல் உளவுத்துறையினரால் மேலிடத்திற்கு போக, நாகை காவல்துறையினர் உடனடியாக துரிதமாக செயல்பட்டு, நேற்றிரவு 12 மணிக்கு தெற்கு பொய்கை நல்லூருக்கு வந்தனர். அங்கு பிரபாகரனின் சிலையை உடனே அகற்றும்படி கிராமத்தினர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். முதலில் எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், பின்னர் காவல்துறையினரின் அதிரடியால் அதனை வடிவமைத்தவரை கொண்டு அகற்றிவிட்டனர்.
இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், தெற்கு பொய்கை நல்லூரில் உள்ள ஊர் பெரியவர்கள் யாரும் இப்போது ஊரில் இல்லையாம். காவல்துறையினருக்கு பயந்துபோய் வெளியூருக்கு சென்றுவிட்டார்கள். திருவிழாவை முன்னின்று நடத்திய மாணிக்கம் மற்றும் சிலையை வடிவமைத்தவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதியினர் கூறுகிறார்கள்.
விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கோயிலை இரவோடு இரவாக தமிழக அரசு அடித்து தள்ளிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.