சன் டிவியின் குழுமத்தில் உள்ள 33 சேனல்களுக்கும் தடை வருமா? பரபரப்பு தகவல்

sun networkசன் டிவி குரூப் தொலைக்காட்சிகளுக்கான உரிமங்களை புதுப்பிக்க மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டதால் சன் குழுமத்தின் 33 தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு உரிமங்களும் ரத்தாகலாம் என்று மத்திய அரசின் அதிகார வட்டாரங்களில் இருந்து பரபரப்பாக செய்திகள் வெளியாகி வருகின்றது.

மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்தபோது, பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இருந்து சென்னையில் உள்ள சன் டிவி அலுவலகத்திற்கு 300 இணைப்புகளை முறைகேடாக பெற்று, அதை பூமிக்கடியில் குழாய்களை பதித்து, சன் குழும தொலைக்காட்சிகளுக்கு சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து கலாநிதி மாறன், தயாநிதி மாறன் ஆகிய இருவருக்கும் எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், சன் டிவி குழுமத்தின் 33 தொலைக்காட்சிகளின் உரிமங்களையும் 10 ஆண்டுகளுக்கு புதுப்பிக்கக் கோரி, மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சகத்திடம் சன் குழுமம் சார்பில் சமீபத்தில் விண்ணப்பிக்கப்பட்டது.  மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை விதிகளின்படி, தொலைக்காட்சிகளின் உரிமங்களை புதுப்பிக்கும் நடவடிக்கைக்கான அனுமதியளிப்பதற்கு முன்பு, அதில் இடம்பெற்றுள்ள இயக்குநர்கள் குழு, தலைவர் உள்ளிட்டோரின் பின்னணியை விசாரித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை அளிக்க வேண்டும். இதில் திருப்திகரமான பதில் கிடைத்தால் மட்டுமே, மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சகம் உரிமங்களை புதுப்பிக்கும்

ஆனால் கலாநிதி மாறன், தயாநிதி மாறன் ஆகியோருக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் நடந்து வருவதை சுட்டிக்காட்டிய மத்திய உள்துறை அமைச்சகம் சன் டிவியின் 33 தொலைக்காட்சிகளின் உரிமங்களை புதுப்பிக்க மறுத்துவிட்டது. சன் குழுமத்துக்கு சொந்தமான 40 எப்.எம் வானொலிகளின் உரிமங்களை புதுப்பிக்கக்கோரும் விவகாரத்திலும், இதேபோன்ற முடிவை மத்திய உள்துறை அமைச்சகம் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து சன் டிவி நிர்வாகம் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் என தெரிகிறது.

Leave a Reply