திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும் நடிகருமான அருள்நிதி-கீர்த்தி திருமண விழாவில் பல கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கு பெற்றனர். இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய வைகோ கூறியதாவது: ” இந்த திருமணம் ஒட்டு மொத்த தமிழகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நேரத்தில் எனது இதயத்தை நெகிழ வைக்கும் மலரும் நினைவுகள் என் நெஞ்சு சுவற்றில் வந்து மோதுகின்றன. 44 வருடங்களுக்கு முன்பு என் திருமணத்திற்கு அண்ணன் கலைஞர் வர முடியாமல் போனதற்காக, எனது கிராமமான கலிங்கபட்டிக்கு எனது இல்லத்திற்கு வந்து வாழ்த்தி, விருந்துண்டு, ஓய்வெடுத்து விடைப்பெற்று சென்றதை நினைத்து பார்க்கிறேன்.
அதே போல் 1978ஆம் ஆண்டு என் தம்பி திருமணத்தை அவர் நடத்தி வைக்க வந்தார். இந்தி திணிப்பு போராட்டத்தின் போது சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறையில் இருந்தார் அண்ணன். நானும் நெல்லையில் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைப்பட்டேன். அங்கிருந்து நான் எழுதிய மடலை காட்டி அண்ணன் நெகிழ்ந்ததையும் கேட்டு மகிழ்ந்தேன். கலை உலகத்தில் யாரும் நெருங்க முடியாத கலைஞரின் கலை திறனில் மணமகன் நடிக்கிறார்.
இந்த நேரத்தில் சங்க இலக்கியத்தில் சொன்னது போல் செம்மண்ணில் கலந்த நீர்போல் இரண்டற கலந்து விட்டனர் மணமக்கள். நெஞ்சத்தால் இணைந்து விட்டோம் இனி பிரிவுக்கு இடமில்லை என்று மணமக்களை வாழ்த்துகிறேன்.
எத்தனையோ பேரின் தியாகத்தால் கட்டப்பட்ட மாளிகை திராவிட இயக்கம். இதை எந்த காலத்திலும், எப்படிப்பட்ட புயலும், எப்போர்பட்ட பகையும், ஏன் பிரளயமே வந்தாலும் சாய்க்க முடியாது. சாய்க்கவும் விட மாட்டோம்” என்று கூறினார்.
இதே திருமணத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களும் கலந்து கொண்டார். தமிழகத்தை தொடர்ந்து திராவிட கட்சிகள் சீரழித்து வருவதாக அடிக்கடி கூறிவரும் ராம்தாஸ் முன்னால் வைகோ, திராவிட இயக்கம் குறித்து கூறியதால் விழாவில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.