2015-ம் ஆண்டிற்கான ஆப்பிள் அனைத்துலக மேம்பாட்டாளர்கள் மாநாட்டில் பார்வையாளர்களின் கவனத்தை அதிக அளவில் ஈர்த்தது ஆப்பிள் மியூசிக் சேவையும், ஐஒஎஸ் 9-ன் வெளியீடும் தான்.
வழக்கமான ஐஒஎஸ் இயங்குதளங்கள் ஐபோன்களின் திறனை அதிகரிக்கும், பல்வேறு புதிய செயலிகளை மேம்படுத்திக் கொள்ளலாம், புதிய சேவைகளை உடனுக்குடன் செயல்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் ஐஒஎஸ் 9-ல் மேற்கூறியவை மட்டுமல்லாமல் செயற்கை நுண்ணறிவு பயன்பாடான ‘ப்ரோஆக்டிவ் சிரி’ (Proactive), டிரான்ஸிட் தகவல்களைத் தரும் ஆப்பிள் மேப், குறிப்புகளுக்கான ‘நோட்ஸ்’ (Notes) செயலி மற்றும் மேம்படுத்தப்பட்ட செய்திகள் செயலி என பல்வேறு கூடுதல் அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
ஐஒஎஸ் 9-ஐ அறிமுகப்படுத்திய பின் பேசிய ஆப்பிள் துணைத் தலைவர் கிரேக் பெடரிச், “ஆப்பிளின் ஐஒஎஸ் 9 செயல்திறன் மிக்க செயலிகளையும் பல்வேறு மேம்பாடுகளையும் ஒட்டுமொத்தமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ப்ரோஆக்டிவ் சிரி, டிரான்ஸிட் தகவல்களைத் தரும் ஆப்பிள் மேப், நோட்ஸ் செயலி என பார்த்துப்பார்த்து மேம்படுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு செயலிகளும் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “மற்ற ஐஒஎஸ் இயங்குதளங்களை விட ஐஒஎஸ் 9, ஐபோன்களின் மின்கல பாதுகாப்பில் அதிக அக்கறை காட்டும். இதில் மேம்படுத்தப்பட்டுள்ள ‘லோ பவர் மோட்’ (Low Power Mode) சேவை மின்கலத்தின் ஆயுளை அதிகரிக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இவை மட்டுமல்லாமல், ஐபோன் 4எஸ் மற்றும் ஐபோன் 5-வை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்கள் ஐபோன்களில் ஐஒஎஸ் 9-ஐ இலவசமாக மேம்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் ஆப்பிளின் பழைய கருவிகள் தேவையான வேகத்தையும், இயக்கு திறனையும் பெற்று புத்துயிர் பெறும்.