கோவிந்தா கோஷம் முழங்க அரங்கநாதர் கோவிலில் கும்பாபிஷேகம்!

dr 02

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் கும்பாபிஷேகம், பக்தர்களின் கோவிந்தா, கோவிந்தா கோஷம் முழங்க சிறப்பாக நடந்தது. இதில், சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் பங்கேற்று, அரங்கநாத பெருமாளை வழிபட்டனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள வைணவ தலங்களில், மிகவும் பிரசித்தி பெற்றதும், முதன்மையான ஸ்தலமுமாக காரமடை அரங்கநாதர் கோவில் விளங்குகிறது. இங்கு, ஆறு கோடி ரூபாய் செலவில், புதிய ராஜகோபுரம், கல்யாண மண்டபம், சுற்றுப்பிரகார மண்டபங்கள் அமைக்கப்பட்டன.

மூலவர், ஆண்டாள், தாயார் சன்னதிகள் சீரமைக்கப்பட்டன. இதன் கும்பாபிஷேக விழா,  3ம் தேதி தீர்த்தக்குடங்கள், முளைப்பாரி ஊர்வலத்துடன் துவங்கியது. 4 ம் தேதியிலிருந்து, நேற்று காலை வரை ஆறுகால பூஜைகள் நடந்தன. இந்த நாட்களில் விமானங்கள் மீது கலசங்கள் அமைத்தல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், சங்கபிஷேக பூஜைகள் நடந்தன.

நேற்று காலை, 5:00 மணிக்கு சதுஸ்தான பூஜையும், 6:00 மணிக்கு ஆறாம் கால யாக பூஜையும் நடந்தது. 8:30 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க, அர்ச்சகர்கள் தீர்த்தக்குடங்களை கோவிலின் உள்பிரகாரத்தில் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின், அரங்கநாத சுவாமி, அரங்கநாயகி தாயார், ஆண்டாள், பரவாசு தேவர், வீரஆஞ்சநேயர், ராமானுஜர், பரமபதவாசல் மற்றும் புதிய ஏழு நிலை ராஜகோபுரம் ஆகிய விமானங்களுக்கு தீர்த்தக்குடங்களை அர்ச்சகர்கள் எடுத்துச் சென்றனர்.

காலை, 9:25 மணிக்கு, ஒரே நேரத்தில் எட்டு கோபுரங்களில் உள்ள கலசங்களின் மீது புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள், கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டனர்.

கும்பாபிஷேக விழாவை, ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கண்டு களித்தனர். கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றிய சில வினாடிகளில், 30 க்கும் மேற்பட்ட இடங்களில், ஒரே நேரத்தில் ஸ்பிரிங்லர் மூலம் பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டது. பின், மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் தெளித்து, பெரும் பேரொளி வழிபாடு பூஜை செய்து, பிரசாதம் வழங்கப்பட்டது.

விழாவில் ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் வேலுமணி, எம்.பி.,க்கள் செல்வராஜ் கோபால கிருஷ்ணன், எம்.எல்.ஏ., சின்னராஜ், மலரவன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் இளம்பரிதி,  மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் ஞானசேகரன், காரமடை பேரூராட்சி தலைவர் ஆறுமுகசாமி, ஒன்றிய சேர்மன் ராஜ்குமார், பெள்ளாதி ஊராட்சி தலைவர் பூபதி குமரேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

விழா ஏற்பாடுகளை தக்கார் ஜீவானந்தம், கோவில் செயல் அலுவலர் நந்தகுமார் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

கும்பாபிஷேக நிகழ்வுகளை, நான்கு ரத வீதிகளில் உள்ள பக்தர்கள் பார்க்க வசதியாக, ஐந்து இடங்களில் எல்.இ.டி., பெரிய ஸ்கிரீன் உதவியால் ஒளி பரப்பப்பட்டது. பக்தர்களுக்கு ஏழு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்ட போலீஸ் எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில், டி.எஸ்.பி.கள், இன்ஸ்பெக்டர்கள் உட்பட, 700 போலீசார், 150 ஊர்காவல் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

விழாவில் ஒரு பெண்ணின் கழுத்தில் இருந்த, ஏழு பவுன் தங்க செயினையும், மற்றொரு பெண்ணின் கழுத்தில் இருந்த, மூன்று பவுன் தங்கச் செயினையும், திருடர்கள் அறுத்துச் சென்றனர்.

Leave a Reply