டெல்லி சட்ட அமைச்சர் திடீர் கைது. கெஜ்ரிவாலுக்கு நெருக்கடி கொடுக்கின்றதா மத்திய அரசு?

law 500போலி சான்றிதழ் சமர்ப்பித்த விவகாரத்தால் டெல்லி சட்ட அமைச்சர் கைது செய்யப்பட்ட விவகாரம் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் மத்திய அரசுக்கு ஏற்பட்டு வரும் மோதலின் உச்சகட்டம் என கூறப்படுகிறது.

டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும்போது மனுதாக்கலுடன் சமர்பித்த கல்விச்சான்றிதழ் போலியானது என்று சட்ட அமைச்சர் ஜிதேந்திர சிங் தோமர் மீது சமீபத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு பீகார் திலக் மஞ்சி பகால்பூர் பல்கலைகழகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதனையடுத்து பீகார் பல்கலைகழகம் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில், தோமரின் பட்டப்படிப்பு சான்றிதழ் போலியானது என்றும், தங்களது பல்கலைகழக பதிவுகளில் சான்றிதழ் எதுவும் இல்லை என்றும், சான்றிதழில் உள்ள வரிசை எண் மற்றொரு நபரின் சான்றிதழுக்குரியது என்றும் தெரிவித்து இருந்தது. இதனையடுத்து ஜிதேந்திர சிங் தோமரின் சட்டப்படிப்பு சான்றிதழ் போலி என தெரியவந்தது.

இதனை அடுத்து டெல்லி சட்ட அமைச்சர் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். சட்ட அமைச்சர் கைது குறித்து கருத்து கூறியுள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் சஞ்சய் சிங், “டெல்லி போலீஸார் மத்திய உள்துறை அமைச்சக கட்டுப்பாட்டில் வருவதால், மோடி அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி டெல்லியில் ஆட்சியில் இல்லாமலும் மறைமுக ஆதிக்கம் செலுத்த முயல்கிறது” என குற்றம் சாட்டினார்.  ஜிதேந்தர் சிங் தோமருக்கு முறையான நோட்டீஸ் வழங்காமல் போலீசார் கைதுசெய்து உள்ளதாகவும், டெல்லியின் சட்டமந்திரி கைது மூலம் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நெருக்கடி கொடுக்க மத்திய அரசு முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply