சூரிய வணக்கத்தை எதிர்ப்பவர்கள் கடலில் மூழ்கிவிடலாம். பாஜக எம்.பியின் சர்ச்சை கருத்து

surya namaskharஉத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கோரக்பூர் தொகுதியின் பாஜக எம்.பி யோகி அதித்யாநாத் ஏற்கனவே பலமுறை பல சர்ச்சைக் கருத்துக்களை கூறி பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் நேற்று சூரிய வணக்கத்தை எதிர்ப்பவர்கள் கடலில் மூழ்கிவிடலாம் என்று கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று வாரணாசியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய யோகி அதித்யாநாத், “”சூரியனிடமிருந்தே வாழ்க்கைக்கான ஆற்றல் நமக்கு கிடைக்கிறது. யோகாவை தவிர்க்க நினைப்பவர்கள் இந்தியாவிலிருந்தே வெளியேரலாம். சூரியனை மதவாதத்தோடு பார்ப்பவர்கள் தயவுகூர்ந்து சென்று கடலில் மூழ்கிவிடலாம் அல்லது இருட்டறைக்குள்ளே வாழலாம். எந்தச் சமூகத்தினர் என்று பார்த்து சூரிய ஒளி வீசுவதில்லை. அதன் ஆற்றலுக்கு சாதி, மத பேதம் கிடையாது. இது புரியாமல் இதனை இவர்கள் மதவாதத்தோடு ஒப்பிடுவது அவர்களது பின்தங்கிய மனநிலையை மட்டுமே காட்டுகிறது” என்று கூறியுள்ளார்.

ஜுன் 21ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படும் நிலையில் அன்றைய தினம் இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சூரிய நமஸ்காரம் செய்ய மத்திய அரசு வலியுறுத்தியது. ஆனால் முஸ்லீம் அமைப்புகளின் எதிர்ப்பை அடுத்து இந்த திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் யோகி அதித்யாநாத் கூறியுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply