பல்லில் சொத்தையானது கடுமையாக இருந்தால் ஒரு கட்டத்தில் பொடிப் பொடியாகப் பற்கள் உடைந்துவிட வாய்ப்புகள் அதிகம். அடுத்து, விபத்துகளின் மூலம் பல்லில் அடிபடுமானால் பல் உடையலாம். குழந்தைகள் கவனக்குறைவாக விளையாடும்போது பற்கள் உடைய வாய்ப்பு இருக்கிறது. சண்டை போடும்போது முகத்தைத் தாக்கினால் பற்கள் உடையும், இருட்டில் எங்காவது இடித்துக் கொள்ளும்போதுகூடப் பற்கள் உடையக்கூடும். தெற்றுப்பற்கள் உள்ளவர்களுக்குச் சிறு விபத்து ஏற்பட்டாலும் பற்கள் உடைந்துவிடும்.
என்ன செய்ய வேண்டும்?
பல்லில் அடிபட்டு முழு பல்லும் பெயர்ந்து விழுந்தாலும், பாதி பல் உடைந்தாலும், அந்தப் பல்லை ஒரு டம்ளர் பாலில் போட்டு மூடி, உடனடியாகப் பல் மருத்துவரிடம் அதைக்கொண்டு செல்லுங்கள். உடைந்த பல்லை மீண்டும் அதே இடத்தில் பொருத்திவிடலாம்.
பாதிப் பல் உடைந்துவிட்டால்?
பல்லின் உடைந்த பகுதியை ஒரு வகை சிமெண்ட் கொண்டு அடைப்பது, பல்லின் மேல் `கேப்’ போட்டு மூடுவது, பல் முழுவதையும் எடுத்துவிட்டு, அந்த இடத்தில் ‘இம்பிளான்ட் சிகிச்சை’ மூலம் செயற்கைப் பல்லைப் பொருத்துவது எனப் பல சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பற்கள் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனவோ அதைப் பொறுத்து சிகிச்சை அமையும்.
சில நேரம் பல்லில் அடிபட்டிருக்கும், ஆனால் உடைந்திருக்காது. இதனால் வலி இருக்காது. அதேநேரம் சில நாட்களில் பல்லின் நிறம் கொஞ்சம் கொஞ்சமாகப் பழுப்பு நிறத்துக்கு மாற ஆரம்பிக்கும். இதற்குக் காரணம், பல்லுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைந்துவிட்டது என்பதுதான். இந்த நிலையில் உடனடியாகப் பல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். இல்லையென்றால், பல் முழுவதும் பழுப்பு நிறத்துக்கு மாறிவிடும். பல்லையே அகற்ற வேண்டி வரலாம். இதைத் தவிர்க்கவே உடனடியாக மருத்துவரைச் சந்திக்க வேண்டியது அவசியம்.
பல் உடைவதைத் தடுக்க வழி:
1. இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் தலைக்கு ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டியது கட்டாயம்.
2. எந்த விளையாட்டானாலும் கவனமாக விளையாடுங்கள். குறிப்பாக, கிரிக்கெட் விளையாடும்போது, முகத்துக்கு நேராக வரும் பந்தை அடிக்கும்போதோ, பிடிக்கும் போதோ கவனமாக இருங்கள்.
3. பற்களுக்கு மேல் செயற்கைக் கவசம் போட்டுக்கொள்வது அல்லது ‘மவுத் கார்டு’ அணிந்துகொள்வது பற்கள் உடையாமல் இருக்க உதவும்.
4. குழந்தைகள் சண்டைகளில் ஈடுபடுவதை அவசியம் தவிர்க்க வேண்டும்.
5. வீடுகளிலும் அலுவலகத்திலும் விபத்துகள் ஏற்படுவதைத் தவிர்க்கவும். முக்கியமாக, தண்ணீர் இருக்கும் பகுதிகளில் கவனமாக நடந்து செல்லுங்கள்.
6. செல்போன் பேசிக்கொண்டே வாகனங்களில் ஏறுவதையும் இறங்குவதையும் தவிருங்கள்.