ஆர்.கே.நகர் இடைத்தேர்தல். ஜெயலலிதா உள்பட 32 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நேற்றுடன் நிறைவடடைந்த நிலையில் இன்று மனுக்கள் பரிசீலிக்கப்பட்டது. இதில் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மகேந்திரன் ஆகியோர்கள் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.
கடந்த 3ஆம் தேதி தொடங்கிய ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வேட்புமனு தாக்கல், முதல் நாளிலேயே சூடுபிடித்து நேற்று வரை மொத்தம் 51 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ஆம் தேதியும், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரன் கடந்த 9ஆம் தேதியும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரன் உள்ளிட்ட 32 பேர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் மதுவிலக்கை வலியுறுத்தி போராடி வரும் காந்தியவாதி சசிபெருமாளின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தனது வேட்பு மனுவை ஏற்க வலியுறுத்தி சசிபெருமாள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளார். இந்நிலையில் சசிபெருமாள் உள்ளிட்டவர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தேர்தல் அதிகாரி விரைவில் அறிவிக்க உள்ளார்.
மனுக்களைத் திரும்பப் பெற ஜூன் 13 ஆம் தேதி கடைசி தினமாகும். அன்றைய தினம் இறுதி வேட்பாளர்களின் நிலை தெரிய வரும். இந்த தொகுதியில் வரும் 27ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.